மதுரை: தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கு ஒன்று இளஞ்சிறார் நீதிக் குழுமத்திலிருந்து நெல்லை மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது
இளஞ்சிறார்கள் நீதிபரிபாலன சட்டத்தின்படி (JJ Act), இதுவரையிலும் 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கொடூர குற்றங்களில் ஈடுபட்டு இருந்தாலும், கூட அவர்களுக்கு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் விசாரணை நடைபெறும். மேற்படி நீதிகுழுமத்தில் அதிகபட்சம் 3 ஆண்டு வரையே தண்டனை விதிக்கம் நிலை உள்ளது.
16 வயது நிறைவடைந்த இளஞ்சிறார்கள் கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் சமயம், அவர்களை முழுமையான பருவம் அடைந்தவர்கள் என கருதி, அந்தக் குற்றத்திற்கான விசாரணை இளஞ்சிறார் நீதி குழுமத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கமான குற்ற நடைமுறை விசாரணை நடைபெறும். இதன் மூலம் அக்குற்றத்திற்கு கூடுதல் தண்டனை விதிக்க இயலும்.
அவ்வகையில் சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கு மற்றும் பாப்பாகுடி – பள்ளக்கால் புதுக்குடி பள்ளியில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட மாணவர் வழக்கில் சம்பந்தப்பட்ட 3 இளஞ்சிறார்களில் ஒருவர் 16 வயது பூர்த்தியானவர். இவரை பருவம் அடைந்தவராக கருதி தமிழகத்திலேயே முதன்முறையாக அவர் மீதான விசாரணையை இளஞ்சிறார் நீதிகுழுமத்திலிருந்து நெல்லை மாவட்ட நீதி மன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்திருக்கிறார்.