36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஊட்டியில் உள்ள கல்லட்டி மலைப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளால் உயிர்கள் காவு வாங்கப்படுவது குறித்து புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் குழு சார்பில் செய்தி சேகரிக்கப்பட்டு பகிரப்பட்டது. யூடியூப் தளத்தில் வெளியான அந்த செய்தி 13 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு பலருக்கும் கல்லட்டி பாதையில் ஏன் விபத்துகள் நிகழ்கிறது என்பதை தெளிவுபடுத்தியிருந்தது.
இப்படி இருக்கையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து டூரிஸ்ட் வேன் மூலம் ஊட்டியை சுற்றிப்பார்க்க ஐ.டி. ஊழியர்கள் குழு ஒன்று சென்றிருந்தது.
அந்த டூரிஸ்ட் வேன் கல்லட்டி அருகே 15வது கொண்டை ஊசி வளைவில் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்து 19 பேரில் ஒரு பெண் உயிரிழக்க எஞ்சிய 18 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாகவும், கல்லட்டி பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டதன் விளைவாகவும், மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல வனத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, சென்னையில் இருந்து சென்ற டூரிஸ்ட் வேனை ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தவறான வழியில் அழைத்துச் சென்ற கல்லட்டியில் உள்ள தனியார் காட்டேஜ் உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரையும் உதகை புதுமந்து போலிஸார் கைது செய்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிந்திருக்கிறார்கள்.
இருப்பினும், கல்லட்டி மலைப்பாதை குறித்து மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டி மற்றும் உள்ளூர் மக்களிடையே தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM