அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முகாம் ஒற்றைத் தலைமைக்கான மோதலில் ஈடுபட்டு வருவதால், அதிமுகவை ஆதரிக்கும் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தீவிர அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலா தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திப்பதற்காக ஜூன் 26 ஆம் தேதி முதல் ‘புரட்சி பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். ஜூன் 26 ஆம் தேதி திருத்தணி பைபாஸ் அருகே தனது ஆதரவாளர்களை சந்தித்தார். முதல் சுற்றுப் பயணத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் தொண்டர்களை சந்தித்தார். திண்டிவனத்தில் தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த வாரம் வானூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் தொண்டர்களை சந்திக்கிறார்.
கடந்த மாதம் முதல் பாதியில் நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர் ஆகிய இடங்களில் கட்சித் தொண்டர்களுடன் தனது உரையாடலைத் தொடங்கிய டிடிவி தினகரன், மாநிலத்தின் பிற இடங்களுக்கும் சென்று வருகிறார். ஞாயிறு, திங்கட்கிழமைகளில் சேலம், தருமபுரியில் பயணம் செய்தார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் ஒவ்வொரு நாளும் உச்சகட்டத்தை அடைந்துவரும் நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் நிகழ்ச்சிகளுக்கும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சசிகலா மற்று டிடிவி தினகரன் இருதரப்பு வட்டாரங்களும் மறுக்கின்றன.
அதிமுகவில் உள்கட்சி பூசல் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டதாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு வட்டாரங்கள் கூறுகிறார்கள்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரும் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர். சசிகலா அதிமுகவில் ஒற்றைத் தலைமையின் அவசியத்தை ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்திப் பேசினார். அதிமுகவின் பொதுச் செயலாளர் அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறவராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால், டிடிவி தினகரன், தருமபுரியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமை வகித்த அதிமுகவில் நடந்த சம்பவங்கள் வருத்தமாக இருந்தாலும், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தாலும் அல்லது நடக்காவிட்டாலும் யார் பொதுச்செயலாளர் ஆனால் என்ன? தான் ஒரு கட்சியை நடத்தி வருவதாகக் கூறினார்.
இதனிடையே, முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், தன்னை அ.தி.மு.க-வின் உறுப்பினராகக் கூறிக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
ஆனால், அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தித்தாளின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அதிமுகவில் இரட்டைத் தலைமையை வலியுறுத்திப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“