‘ஆர்ஆர்ஆர்’ gay படம் என விமர்சித்த ஆஸ்கர் பிரபலம்- ‘பாகுபலி’ படத் தயாரிப்பாளர் தக்க பதிலடி

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி விமர்சித்தநிலையில், அவருக்கு எதிராக ‘பாகுபலி’ பட தயாரிப்பாளர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

image

1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய உள்பட 5 மொழிகளில் கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படம், 1,150 கோடி ரூபாய் வசூலித்து, தென்னிந்திய அளவில் அதிகம் வசூலித்தப் படங்களில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

image

இந்நிலையில் பிரபல நடிகரும், எழுத்தாளருமான முனீஷ் பரத்வாஜ், நேற்றிரவு ‘ஆர்.ஆர்.ஆர்.’ எனப்படும் 30 நிமிட குப்பை படத்தைப் பார்த்தேன் என்று ட்விட்டரில் கடந்த 3-ம் தேதி குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்கு, ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் சிறந்த சவுண்ட் மிக்சிங்கிற்காக விருது வென்ற ரசூல் பூக்குட்டி பதிலளித்திருந்தார். அதில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்கள் படம் என்றும், ஆலியா பட் இந்தப் படத்தில் செட் பிராப்பர்ட்டியாக பயன்படுத்ததப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ரசூல் பூக்குட்டியின் இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் பொங்கியெழுந்து கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

image

தெலுங்கு சினிமாவின் வளர்ச்சியை ரசூல் பூக்குட்டியால் பொறுத்துக் கொள்ள முடியாததால்தான் இவ்வாறு கூறியிருப்பதாகவும்கூட நெட்டிசன்கள் சிலர் விமர்சித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஷோபு யர்லகட்டா, ரசூல் பூக்குட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “நீங்கள் கூறுவதுப்போல் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை என தான் நினைக்கவில்லை. ஒருவேளை உங்கள் கூற்றுப்படி அது அப்படிப்பட்ட படமாகவே இருந்தாலும் கூட, அதில் என்ன தவறு. தன் பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையை படமாக எடுப்பது அவ்வளவு தவறான விஷயமா?. நீங்கள் எப்படி இதனை நியாயப்படுத்துவீர்கள். இத்தகைய விமர்சனங்கள் மூலம் உங்களுடைய தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளது மிகவும் ஏமாற்றம்” என்று அவர் தெரிவித்திருந்தார். ஷோபு யர்லகட்டாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர்.

image

இதையடுத்து ஷோபு யர்லகட்டாவின் இந்த ட்வீட் பதிவுக்கு, ரசூல் பூக்குட்டி பதிலளித்துள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அவ்வாறு கூறவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “ஷோபு யர்லகட்டாவின் தன்பாலின ஈர்ப்பாளர் கருத்தை ஒத்துக்கொள்கிறேன். தன்பாலின ஈர்ப்பாளர் கதையாகவே இருந்தாலும் அது தவறில்லை. இது பொதுவான கருத்துதான். இதை இந்த அளவிற்கு சீரியசாக ஷோபு யர்லகட்டா எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தான் தவறான எண்ணத்தில் அந்த கருத்தை பதிவு செய்யவில்லை. இத்துடன் இந்த விவாதத்தை நிறுத்திக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.