மார்க்கண்டேயனுக்கு சிவபெருமான் என்றும் பதினாறு என்று வரம் அளித்த தளமாக விளங்கும் திருக்கடையூர் அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், காலசம்கார மூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள்.
ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்) செய்வது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். மேலும் ஆயுள் விருத்திக்காக உக்ரரதசாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமண பூஜைகள் செய்யப்படுகின்றன.
நேற்று தனது மனைவி ஷோபா சந்திரசேகருடன் வந்த இயக்குனர் எஸ்,ஏ. சந்திரசேகர் அங்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மிருத்தியுஞ்ச் ஹோமம், ஆயுள்விருத்தி ஹோமம் சுதர்சன் ஹோமம், துர்கா, சப்தமி அஷ்டலட்சுமி, நட்சத்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களை செய்தனர் முன்னதாக கோ பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சதாபிஷேக ஹோமம் நடத்திவைக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் சதாபிஷேக விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.