யார் உண்மையான அதிமுக? எம்.ஜி.ஆர் உயில் என்ன சொல்கிறது?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக இ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே தீவிரமான மோதலும் சட்டப் போராட்டமும் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட அணியே உண்மையான அதிமுக-வாகக் கருத வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் விருப்பம் முக்கியத் தீர்வைக் கொண்டுள்ளது என்று அரசியல் விமர்சகர் தராசு ஷியாம் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஒரு பெரும் புயல் வீசி வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு களேபரமாக முடிந்தது. இதையடுத்து, ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று கூறிவருகின்றனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் கோர்ட் படியேறியுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் முகாம் இடையே மோதல் நாளுக்குநாள் உச்சமடைந்து வருகிறது. அதிமுக தலைமை தொடர்பாக சட்டம்ப்போராட்டமும் நடந்து வரும் நிலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், உண்மையான அதிமுக யார்? கட்சி விதி என்ன சொல்கிறது? இந்த விவகாரத்தில் எம்.ஜி.ஆரின் விருப்பம் என்னவாக இருந்தது என்பது உள்ளிட்ட கேள்விகளை தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது

அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட அணியே உண்மையான அதிமுக-வாகக் கருத வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் விருப்பம் முக்கியத் தீர்வைக் கொண்டுள்ளது என்று அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர் ஷியாம் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் தராசு ஷியாம், “அதிமுகவில் யாரேனும் ஒரு தலைவருக்கு அப்படி 80% ஆதரவு இருக்கிறதா என்பதை அறிவதற்கு ஒரே வழி தேர்தலை நடத்துவதுதான். ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவில் தேர்தலை நடத்துவது என்பது நவீன தொழில்நுட்பத்தில் சாத்தியம்; அதிமுகவினர் அனைவரும் தார்மீக அடிப்படையில் தேர்தலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, 1988-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன், அப்போதைய அதிமுக அவைத் தலைவர் ஈ.வி.வள்ளிமுத்து ஆகியோர் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் உயில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாசிக்கப்பட்டதை ஷியாம் நினைவு கூர்த்தார்.

சத்யா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான தனது பங்குகள் மற்றும் இதர சொத்துக்கள், 80% உறுப்பினர்கள் சேர்ந்து செயல்படுகிற அதிமுகவுக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் எம்.ஜி.ஆர் தனது உயிலில் கூறியுள்ளார். “அதிமுக பிளவுபட்டால் அல்லது கலைக்கப்பட்டால், எனது விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் சத்யா ஸ்டுடியோ போன்றவற்றில் உள்ள எனது பங்குகளை காதுகேளாதவர்களுக்காக தனது பெயரில் இயங்கும் அறக்கட்டளையால் பராமரித்து பயன்படுத்த வேண்டும்” என்று எம்.ஜி.ஆர் தனது உயிலில் கூறியுள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை எம்ஜிஆர் கட்சியின் நிரந்தர விதியாகக் கொண்டுவந்தார் என்றும், பின்னர், ஜெயலலிதாவும் இதை வலியுறுத்தினார் என்றும் ஷியாம் விளக்கினார். பொதுவாக, உயில் என்பது ஒருவரின் சொத்துகளைப் பற்றியதாக இருக்கும் ஆனால், எம்.ஜி.ஆர் தனது உயிலில் கட்சியின் நலனில் அக்கறை காட்டி, அதைத் தக்கவைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதில், தனது பங்குகள் 80 சதவீத உறுப்பினர்களுடன் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற பிரிவினருக்குப் போக வேண்டும் என்று எம்ஜிஆர் எளிமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், 80 சதவீத உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய எம்.ஜி.ஆர், கட்சி ஒரு வலுவான தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார். மேலும், 80 சதவீத உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார்.

இதனிடையே, நேற்று (ஜூலை 4) திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.கிருஷ்ணன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளின் தேர்தலும் அங்கீகரிக்கப்படாததால், இப்போது நிர்வாகிகள் இல்லை. அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்” என்று கு.ப. கிருஷ்ணன் கூறினார்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட அணியே அதிமுகவாக கருத வேண்டும்; 80% உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் உயில் அதிமுக விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.