கனடாவின் ரொரன்றோ நகரில் பாதுகாவலர்களாக பணிபுரிவோர் தாடி வைத்துக்கொள்ளக்கூடாது, முழுமையாக முகச்சவரம் செய்துகொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து சீக்கிய பாதுகாவலர்கள் பலர் வேலையிழந்தனர்.
சீக்கியர்களைப் பொருத்தவரை அவர்கள் தாடியை மழிக்கக்கூடாது, முடிவெட்டிக்கொள்ளக்கூடாது என மத ரீதியாக அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால், தாடி வைத்திருப்போர் N95 வகை மாஸ்குகளை அணிவது கடினம்.
ஆகவே, தாடி வைத்திருப்போர் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்க N95 மாஸ்க் அணிய இயலாது என்பதால், இந்திய சீக்கியர்கள் முதலானவர்கள் பணி செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.
தாடியை எடுக்காத ஏராளமான இந்திய சீக்கியர்கள் முதலானோர் வேலையிழந்தார்கள்.
இந்நிலையில், உலக சீக்கியர்கள் அமைப்பு (WSO), மத நம்பிக்கைக்காக தாடியை எடுக்காத சீக்கியர்களை வேலையை விட்டு அகற்றுவது மனித உரிமைகள் மீறல் என்று கூறி, அது தொடர்பாக புகார் ஒன்றை அளித்தது.
அதைத் தொடர்ந்து, ரொரன்றோ நகரம், தாடியை மழிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக வேலையிழந்த பாதுகாவலர்களை உடனடியான பணிக்கு எடுக்கவேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், கோவிட் பிரச்சினைகள் இல்லாத இடங்களில் அவர்களுக்கு பணி வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.