தியேட்டர்கள், மால்களுக்கான புதிய கரோனா வழிமுறைகள் – சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன?

சென்னை: வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றபடி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 1000-க்கும் அதிகமாக உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பேருந்துகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், திரையரங்குகள், வணிக வளாக உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பரவல் தினமும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது இன்றியமையாததாகிறது. எனவே திருமண மண்டபங்கள் திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுது கோவிட் தொற்று அதிக அளவு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதனால் திரையரங்கங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதன் நிர்வாகிகள் தங்கள் வளாகங்களுக்கு பொதுமக்கள் வரும் பொழுது கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

  • பொதுமக்கள் அதிக அளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • மேற்குறிப்பிட்ட இடங்களில் அவ்வப்பொழுது கிருமி நாசினி கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
  • வணிக நிறுவனங்கள் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாதுகாப்பு வழிமுறைகளை குறிப்பாக முகக்கவசம் அணிவது இன்றியமையாதது. எனவே சென்னை பெருநகர போக்குவரத்து கழக ஊழியர்களை குறிப்பாக பேருந்துகளில் பணியில் உள்ள ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரை கட்டாயம் முகக்கவசம் அணியவும், பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களும் முகக்கவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதையும் சமுக இடைவெளியை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.பணியாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். செலுத்தாத நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பணிமனையின் மேலாளர் சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலரை அணுகினால் பணிமனையிலே தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.