ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகளை, சுற்றி வளைத்து பிடித்தது குறித்து கிராம மக்கள் முழுமையான விளக்கம் அளித்துள்ளனர்.
காஷ்மீரின் ஜம்மு பகுதி ரீஸி மாவட்டம், டக்சன் தோக் கிராமத்தில் பதுங்கியிருந்த 2 லஷ்கர் தீவிரவாதிகளை கடந்த 3-ம் தேதி அந்த கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் லஷ்கர் கமாண்டர் தலிப் உசேன், தீவிரவாதி பைசல் அகமது தர் என்பது தெரியவந்தது. தீவிரவாதிகளை பிடித்து கொடுத்த கிராம மக்களுக்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா ரூ.5 லட்சம் பரிசு தொகையை வழங்கினார்.
தீவிரவாதிகளை பிடித்தது குறித்து டக்சன் தோக் கிராம மக்கள் தரப்பில் முகமது யூசுப் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து கிராமத்துக்கு திரும்பினேன். அப்போது எனது வீட்டில் 2 பேர் இருந்தனர். இருவரும் தங்களை வியாபாரிகள் என்று அறிமுகம் செய்தனர். அவர்களை பார்த்து எனக்கு சந்தேகம் எழுந்தது. இருவரும் தீவிரவாதிகள் என்பதை புரிந்து கொண்டேன்.
எனது செல்போனை அணைத்து வைக்க கோரிய அவர்கள், நான் வீட்டை விட்டு வெளியே செல்வதையும் தடுத்தனர். செல்போனை அணைத்து தரையில் வைப்பதுபோல நடித்து, கையில் மறைத்து வைத்து கொண்டேன். இருவரையும் இயற்கை உபாதைக்காக வெளியே அழைத்து சென்றேன்.
அப்போது ரகசியமாக எனது அண்ணன் நசீர் அகமதுவை செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்தேன். சுதாரித்துக் கொண்ட எனது அண்ணன், உறவினர்களை உதவிக்கு அழைத்தார். ரோஷன் டின், சம்சுதீன், முஸ்தாக் அகமது, முகமது இக்பால் ஆகிய உறவினர்கள் உதவிக்கு வந்தனர்.
அண்ணனும் உறவினர்களும் நள்ளிரவில் எனது வீட்டுக்கு வந்தபோது, 2 தீவிரவாதிகளும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இரவில் தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பியோடினால் அவர்களை பிடிப்பது கடினம். எனவே இரவு முழுவதும் காத்திருந்தோம். 4 பேர் வீட்டுக்கு உள்ளேயும், 2 பேர் வீட்டுக்கு வெளியேயும் காவல் காத்தோம்.
தீவிரவாதிகள் தூங்கும்போதே அவர்களின் பைகள், உடைமைகளை எடுத்து மறைத்து வைத்து விட்டோம். அதில் துப்பாக்கிகளும் கையெறி குண்டுகளும் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை விடிந்ததும் இரு தீவிரவாதிகளையும் மடக்கினோம். இருவரும் தங்களது துப்பாக்கி, கையெறி குண்டுகளை தேடினர். அவை கிடைக்காததால் சரமாரியாக எங்களை தாக்கினர்.
தீவிர பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பதால் அவர்களை மடக்கிபிடிப்பது கடினமாக இருந்தது. நாங்கள் 6 பேரும் சேர்ந்து தீவிரவாதிகள் தப்பிச் செல்லவிடாமல் தடுத்தோம். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 2 தீவிரவாதிகளையும் பிடித்து கயிறால் கட்டினோம். அதன்பிறகு போலீஸாருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தோம். காஷ்மீரில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முகமது யூசுப் தெரிவித்தார்.