தார்வாட் : கர்நாடகாவில், பிரபல வாஸ்து ஜோதிட நிபுணரான சந்திரசேகர் குருஜி, நேற்று மதியம் பிரபல ஹோட்டலில் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். 40 வினாடிகளில், 60 முறை கொடூரமாக குத்தி கொன்று தப்பியோடிய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. கல்யாண கர்நாடகா பகுதியின் பாகல்கோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர் குருஜி, 50. பிரபல வாஸ்து ஜோதிட நிபுணரான இவர், ‘சரள வாஸ்து’ என்ற எளிய வாஸ்து பெயரில் பெங்களூரு, ஹுப்பள்ளி போன்ற பல்வேறு இடங்களில் அலுவலகம் வைத்துள்ளார். வாஸ்து குறித்து ஜோதிடம், பரிகாரம் செய்து வருகிறார்.
இவர் தார்வாடின் ஹுப்பள்ளியில் உள்ள உன்கல்லில் இருக்கும் பிரசிடென்சி நட்சத்திர ஹோட்டலில் இம்மாதம் 2ம் தேதி அறை எடுத்து தங்கி இருந்தார். இன்று அறையை காலி செய்வதாக இருந்தது.இந்நிலையில், நேற்று காலை அவருக்கு இரண்டு பேர் போன் செய்தனர். வாஸ்து தொடர்பாக பேச வேண்டும் என்றனர். அவர்களை ஹோட்டல் வரவேற்பறைக்கு வருமாறு கூறினார். மதியம் 12:25 மணி அளவில் இரண்டு பேரும் வரவேற்பறையில் வந்து காத்திருந்தனர். சிறிது நேரத்தில் குருஜியும் வந்தார்.அப்போது இருவரில் ஒருவர், குருஜியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போல மண்டியிட்டார்.
குருஜியும் அவரை எழுப்பி விட முயன்றார். அதற்குள் மற்றொருவர் கத்தியை எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் குருஜி மார்பில் குத்தினார். இதனால் அலறிக்கொண்டே குருஜி தடுக்க முயன்றார்.இதற்குள், ஆசிர்வாதம் வாங்கியவரும் கத்தியை எடுத்து, சரமாரி குத்த துவங்கினார். இதை பார்த்த அங்கிருந்த வரவேற்பாளரான பெண் ஊழியர் அலறியடித்து ஓடினார். சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் ஓடி வந்தாலும், பயத்தால் இருவரையும் தடுக்க முற்படவில்லை. 40 வினாடிகளில் இருவரும் 60 முறை குருஜியை குத்தியும், கழுத்தை அறுத்தும் கொன்றனர்.
தப்பி ஓட்டம்
அவர் இறந்ததை உறுதி செய்த பின்னரே, இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. தகவலறிந்து வந்த வித்யா நகர் போலீசார், குருஜியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள், மகந்தேஷ், 35, மஞ்சுநாத், 34, என்பது தெரியவந்தது. கொலையாளிகள் இருவரும் காரில் மும்பை தப்பி செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனைச்சாவடிகள் உஷார் படுத்தப்பட்டன.ஹுப்பள்ளியில் இருந்து பெலகாவி செல்லும் போது, ராமதுர்கா அருகே உள்ள தும்மவாடா என்ற இடத்தில் பிற்பகல் 3:00 மணி அளவில் கார் ஒன்றை போலீசார் வழிமறித்தனர். ஆனால், போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தாமல் செல்ல முயன்றனர்.இதனால், துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, காரிலிருந்த இருவரையும் கைது செய்தனர். இருவரும் தங்கள் சட்டையை மாற்றி இருந்தனர். கொலை சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, மகந்தேஷ் மனைவி வனஜாக் ஷி, 30, கைது செய்யப்பட்டார்.
போலீசார் கூறியதாவது:கைதான மகந்தேஷ், மஞ்சுநாத் மற்றும் வனஜாக் ஷி ஆகியோர், சந்திரசேகர் குருஜியிடம் 2013 முதல் 2019 வரை வேலை செய்தனர். அப்போது, மகந்தேஷ் மனைவி வனஜாக் ஷி பெயரில், குருஜி ஏராளமான சொத்துக்களை பினாமியாக வாங்கிஇருந்தார். இது தொடர்பாகவும், பண விவகாரத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.எனவே, 2019ல் மூவரையும், குருஜி வேலையை விட்டு நிறுத்தி விட்டார். பினாமி சொத்துக்களை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். ஒரு பக்கம் வேலை இல்லாததாலும், சொத்துக்களை திருப்பி கேட்டதாலும் ஆத்திரம் அடைந்த மூவரும், குருஜியை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டி, கொலையை அரங்கேற்றினர். இவ்வாறு போலீசார் கூறினர்.பாகல்கோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் அங்கடி என்ற சந்திரசேகர் குருஜி, சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். 8 வயதிலேயே நிதி திரட்டி, தன் ஊரில் உள்ள பழைய கோவிலை புதுப்பித்தார். 14 வயதில் ராணுவத்தில் சேர வேண்டும் என விருப்பம் கொண்டார். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நிறைவேறாமல் போனது.எனவே, சிவில் இன்ஜினியரிங் படித்து, 1988ல் மும்பை சென்று, சில ஆண்டுகள் கான்ட்ராக்டராக வேலை செய்தார். 1995ல், ‘சரண சங்குலா’ என்ற அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை செய்தார். பின், வாஸ்துவில் ஆர்வம் ஏற்பட்டு சிங்கப்பூர் சென்று அதை கற்று மும்பை வந்து, ‘சரள வாஸ்து’ என்ற பெயரில் அலுவலகம் துவங்கினார்.பெங்களூரிலும் கிளையை துவக்கினார்.
வாஸ்து மட்டுமின்றி குடும்ப பிரச்னை, கல்வி பிரச்னை, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது, திருமண தடை போன்றவற்றுக்கும் பரிகாரம் கூறி வந்தார்.கொலை செய்யப்பட்ட குருஜி, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு 2016 பிப்ரவரி 19ல், ‘சரள் ஜீவன்’ என்ற தொலைக்காட்சியை துவங்கி நடத்தி வந்தார். இதில் வாஸ்து பற்றிய குறிப்புகளுடன், இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்தும் தகவல்கள் கூறப்பட்டு வந்தது. கொரோனாவால் நஷ்டம் ஏற்பட்டதால், இந்த தொலைக்காட்சியை மூடி விட்டார்.
இன்று இறுதிச்சடங்கு
குருஜிக்கு இரண்டு மனைவியர். ஒருவர் இறந்து விட்டார். முதல் மனைவிக்கு ஒரு மகள் உள்ளார்; இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லை. தார்வாடின் கலகடகில் பள்ளி திறந்து குழந்தைகளுக்கு இலவச கல்வியும் அளித்து வந்தார்.ஹூப்பள்ளியில் உள்ள சுள்ளா சாலையில் குருஜிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு இன்று காலை 10:00 மணிக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு உடல் வைக்கப்படுகிறது. 1:00 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.