புதுடில்லி : பா.ஜ.,வில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ள நுாபுர் சர்மா குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து, நீதித் துறையின் வரம்பை மீறிய செயல். ‘தங்களுடைய லட்சுமண ரேகையை தாண்டியுள்ள உச்ச நீதிமன்றம், உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என, முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுவான கருத்து
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுாபுர் சர்மா, ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை புதுடில்லி நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, நுாபுர் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, ‘நாடு முழுதும் தீப்பற்றி எரியும் வகையில் நுாபுர் சர்மா பேசியுள்ளார். தன் பேச்சுக்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றம் கூறியுள்ள இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 15 முன்னாள் நீதிபதிகள், 77 முன்னாள் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 25 முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் என, 117 பேர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள தாவது: பல மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க நுாபுர் சர்மா வழக்கு தொடர்ந்து உள்ளார். அது தொடர்பாக குறிப்பிடாமல், நாட்டில் உள்ள நிலவரம் குறித்து பொதுவான கருத்தை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டது குறித்தும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது தேவையில்லாத விஷயம். விசாரணையில் உள்ள வழக்குக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நம் நாட்டின் நீதித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நடைமுறை.
இதன் மூலம் நீதித் துறைக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுஉள்ளது. இந்த கருத்துகளை தெரிவித்ததுடன், நுாபுர் சர்மாவின் நியாயமான கோரிக்கையை நிராகரித்துள்ளது, நீதிமன்றத்தின் நடவடிக்கை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தால், நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆக்ரோஷமாக வெளியிடப்பட்ட இந்த கருத்து, மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.அது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது. உச்ச நீதிமன்றம் தன் எல்லையை, லட்சுமண ரேகையை தாண்டியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையில், உடனடியாக திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கையெழுத்து
மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிஷிட்ஜ் வியாஸ், குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம். சோனி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.ரதோட், டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என்.திங்கரா உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆர்.எஸ்.கோபாலன், கிருஷ்ணகுமார், நிரஞ்சன் தேசாய், முன்னாள் போலீஸ் உயரதிகாரிகள் எஸ்.பி.வைத், பி.எல்.வோரா, முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் வி.கே.சதுர்வேதி, எஸ்.பி.சிங் உள்ளிட்டோரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.