கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதிமுக மீண்டும் இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது.
அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர். அன்றைய தினமே தற்காலிக அவை தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினம் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவை எடப்பாடி பழனிசாமி தரப்பு கடைபிடிக்கவில்லை என நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டி, உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். மேலும், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். ஆனால் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகியால், வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி ஆன கே சி பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கட்சியின் உயர்ந்த பதவிக்கு உரிய நபர்களை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக பொதுச் செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் விதி. ஆனால், 2017 ஆம் ஆண்டு நடந்த பொது குழு கூட்டத்தில் இந்த விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. புதிதாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டனர்.
பொது செயலாளருக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் இந்த இருவருக்கும் மாற்றப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகையால், இந்த இருவரால் செய்யப்பட்ட நியமனங்கள் மற்றும் நீக்கல் அனைத்தையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை கட்சியின் தொண்டர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது. தற்போது அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்யும் வகையில், அறிவுரை வழங்க வேண்டும் என கே சி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால், வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொது குழு கூட்டத்தில் தற்காலிக பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கேசி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.