கடந்த ஜூன் 9ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் மின்சார தடை
தொடர்பில் இலங்கை மின்சார சபையின் இரண்டு பொறியியலாளர்கள் கட்டாய
விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
பொறியியலாளர்கள் தரப்பில் இருந்து இன்னும் கருத்துக்கள் வெளியாகவில்லை என தெரியவருகிறது.
இந்த
இருவரும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று நாடாளுமன்றில் அறிவித்தார்.
கட்டாய விடுப்பு
இதன்படி, மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு துணை பொது மேலாளர் மற்றும்
கணினி கட்டுப்பாட்டு தலைமை பொறியாளர் ஆகியோர் கட்டாய விடுப்பில்
அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏற்கனவே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 9ஆம் திகதி மின்சாரம்
தடைப்பட்டமை தொடர்பில் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தது.
நீர்மின் உற்பத்திக்கான, போதுமான நீர் இருந்த போதும், குறித்த தினத்தில்,
டீசல் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் முன் அனுமதியின்றி
மின்சார தடையும் குறித்த தினத்தில் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும்
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
உள்ளக விசாரணை
இந்த சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துமாறு கடந்த ஜூன் மாதம் 10ஆம்
திகதி இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளருக்கு தாம்
பணிப்புரை வழங்கியதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உதவுமாறும்,
பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு
பொறுப்பானவர்களை தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்குமாறும், தாம் இலங்கை
மின்சார சபையிடம் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் கூறினார்.