ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 2 முதுமக்கள் தாழிகள், மனிதனின் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுடறியப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்பினால் உருவாக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அதன் அருகே சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக 3200 ஆண்டுகள் பழமையான இரண்டு முதுமக்கள் தாழியில் இருந்து மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்துள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு என அனைத்து எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதில் இருந்து கண்டறியப்பட்ட பற்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM