418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி: 418 ஆண்டுகளுக்கு பிறகு  திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக் கான  பக்தர்கள்  கோபுரகலசத்தைக் கண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பரவசமடைந்தனர்.

108 வைணவ தலங்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். தென்னிந்தியாவின் வைகுண்டம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்திற்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு. பிரசித்தி பெற்ற இந்த பெருமாள் கோவிலில்,  கடந்த 1604-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கும்பாபிசேகம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமார் 418 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக தமிழகஅரசின் அறநிலையத்துறை சார்பில், கடந்த 6 மாதங்களாக கோவில் புணரமைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கோபுர கலசங்கள், கொடி மரங்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டன. இந்த பணிகள்  நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று (ஜூலை 6-ந்தேதி) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கும்பாபிசேக விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கும்பாபிசேகத்தை முன்னிட்டு, ஜூன்  29-ந்தேதி கும்பாபிஷேக பூஜைகள்  தொடங்கின. முதலில்  கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், புண்ணிய யாகம் உள்பட பல்வேறு யாகங்கள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இரவு நேரத்தில் பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றது. நேற்று (ஜூலை 5ந்தேதி) கோவிலில் உள்ள  கொடிமரத்தில் தங்க கவசம் சாத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கோபுரத்தில் தங்க கலசங்கள் பொருத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. திருவட்டாரில் திரும்பும் இடமெல்லாம் ஆதிகேசவ பெருமாள் உருவம் மின்னொளியில் ஜொலித்தது. திருவட்டார் நகரமே ஜொலி ஜொலித்தது. கும்பாபிசேக விழாவை முமாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் லட்சகக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்திருந்தனர்.

அதையடுத்து இன்று  அதிகாலை 3.30 மணிக்கு (ஜூலை 6ந்தேதி புதன்கிழமை) கும்பாபிசேகத்திற்கான பூஜைகள் தொடங்கியது.  முதலில் கணபதி ஹோமம் தொடர்ந்து,  பிரசாத பிரதிஷ்டை, சுப முகூர்த்தத்தில் பிரதிஷ்டை, உச்சபூஜை, உபதேவன்மார்களுக்கு பிரதிஷ்டை போன்றவை நடத்தப்பட்டன.

காலை 5.10 மணிக்கு பிரதிஷ்டை ஜீவகலச அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களுக்கு வழிபாடு நடைபெற்றது. 6.19 மணிக்கு புனித நீர் கலசங்களை எடுத்துக் கொண்டு நம்பூதிரிகள் கோபுரத்திற்குச் சென்றனர். 6.26 மணிக்கு கோவில் கருவறை பகுதியில் உள்ள 5 கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள மேலும் 2 கோபுர தங்க கலசங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டதும்  பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்தி கோஷம் எழுப்பினர். பெண்கள் குலவையிட்டு வழிபட்டனர். க்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அப்போது தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கும்பாபிசேக விழாவை காண வந்த பக்தர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்றனர். அவர்கள் கும்பாபிசேகத்தை கண்டுகளிக்கும் வகையில் திருவட்டாரில் ஆங்காங்கே அகன்ற திரை டி.வி. வைக்கப்பட்டு, கும்பாபிசேக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கும்பாபிசேகத்தின் போது மழை பெய்தாலும், பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் பக்தி கோஷம் எழுப்பினர். கும்பாபிசேக விழாவை காண வந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பெருமாளை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக கோவிலில் கம்புகள் மூலம் குறிப்பிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒவ்வொரு தடுப்பு பகுதியிலும் பக்தர்கள் நிறுத்தப்பட்டு அடுத்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி ஆதிகேசவ பெருமாளை தரிசித்துச் சென்றனர்.

விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி., கலெக்டர் அரவிந்த், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.

காலை 7.30 மணிக்கு இந்தியப் பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. உள்ளூர் போலீசார் மட்டுமின்றி வெளிமாவட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் லட்சதீபம் நடக்கிறது. தொடர்ந்து 9-ந்தேதி வரை காலை-மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.