`ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுமார் 1,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேலூர் மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகதியில் வேலைகள் நடப்பதால், கோடி கோடியாகப் பணம் விரயமாவதுடன், ஏகப்பட்ட முறைகேடுகளும் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை. அவசரகதியில் ஏடாகூடமாகப் பள்ளம் தோண்டி அரைகுறையாகவிட்டதால், நிறைய விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் தவறி விழுந்து பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
பழைய சாலைகள் மீதே ரோடு போடப்பட்டிருப்பதால், வீடுகள் பள்ளத்துக்குள் சென்றுவிட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று நினைக்கத்தக்க ஓர் சம்பவத்தையும் ஒப்பந்ததாரர்கள் செய்திருக்கிறார்கள். பேரி காளியம்மன் கோயில் தெருவில் சமீபத்தில் இரவோடு இரவாக சிமென்ட் ரோடு போடப்பட்டது. தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டூ வீலரைக்கூட அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூ வீலரின் டயர்களைப் புதைத்திருக்கிறார்கள் கான்ட்ராக்டர்கள்.
விடிந்து வந்து பார்த்த டூ வீலரின் உரிமையாளர் கடப்பாரையால் குத்தி பள்ளம் தோண்டி, வண்டியை எடுத்துச் சென்றார்.
டூ வீலர் சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போட்டனர். இந்தப் புகைப்படங்களெல்லாம் சமூக வலைதளங்கள் வழியாகப் பரவி, பிற மாநிலங்களிலும் கேலிப் பொருளாகியிருக்கின்றன. “யப்பா…உங்க ‘கடமை’ உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள்.
இந்த நிலையில், மேற்கண்ட சாலைகளை அமைத்த விவகாரத்தில், அதன் பொறுப்பாளராகவும் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்த மாநகராட்சியின் 3-வது மண்டலக் குழுவின் உதவிப் பொறியாளர் பழனியை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டிருக்கிறார். அதே சமயம், வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சாலைப் போட்ட ஒப்பந்ததாரர்களிடமும் விளக்கம் கேட்டு, ‘ஷோகாஸ்’ நோட்டீஸையும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கியிருக்கிறது.
இது சம்பந்தமாக, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவிடம் கேட்டோம். “உதவிப் பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இது மாதிரியான போக்குத் தொடர்ந்தால், அதிகாரிகள் மீதான நடவடிக்கையும் தொடரும்.
ஜீப் மீது போடப்பட்ட சாலையை நானும் ஆய்வு செய்தேன். உடனடியாக ஜீப்பை எடுக்கச் சொன்னேன். ‘தொட்டால் தூள் தூளாகிறது? நாம் கை வைத்தால் நமக்குப் பிரச்னை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அனுமதிப் பெற்று அகற்றலாம்’ என்று அதிகாரிகள் பதில் சொன்னார்கள். நான் சொன்னபோதே, ஜீப்பை அகற்றியிருந்தால், இவ்வளவுப் பெரிய விஷயமாக மாறியிருக்காது’’ என்றார் வேதனையோடு!