புதுடில்லி: வரும் 11ம் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், அக்கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது எனக்கூறியுள்ளது. இதனால் ஒற்றை தலைமையை எதிர்பார்த்து இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி நெருங்கிவிட்டது.
கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூலை 6) நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதாடுகையில், நிர்வாகிகளின் ஆதரவை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு எதிராக நாங்கள் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும். உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எல்லை மீறி நடந்து கொண்டது என்றார்.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளிக்கும் தீர்மானங்களை மட்டும் தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியும். உச்சநீதிமன்ற வழக்கால் உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணை பாதிக்கப்பட கூடாது என்றார்.
நீதிபதிகள் கூறுகையில், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தனி நீதிபதி தெளிவாக கூறியுள்ளார். பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை. அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தது ஏன் நட்போ சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்து கொள்ளுங்கள். உங்கள் கட்சி தொடர்பான எல்லா பிரச்னைகளை பொது குழுவில் விவாதியுங்கள், நீதிமன்றத்தில் விவாதிக்காதீர்கள். சென்னை உயர்நீதிமன்ற அதிகாரத்தை நாங்கள் எடுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது?
இந்த விவகாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும். 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் எப்படி தலையிட முடியும்? அதிமுக.,வின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது. அக்கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தை நாடலம் என்றனர்.
ஓபிஎஸ் பின்னடைவு
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இபிஎஸ் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏறக்குறைய 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவில் உள்ள இபிஎஸ், 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படலாம். அதன்பின்னர், ஒட்டுமொத்த கட்சியும் பழனிசாமி கட்டுப்பாட்டில் வந்துவிடும். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்.,க்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Advertisement