விக்ரம் படத்துக்குப் பிறகு, ஷாருக்கான் – அட்லீயின் ஜவான் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ஜவான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என கிட்டத்தட்ட 5 மொழிகளில் இப்படம் அடுத்த வருடம் (2023) ஜூன் 2-ம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையில், நடிகைகள் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
ஓடிடி-யில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ள இப்படத்துக்கான பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இப்படத்தில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் இணைந்துவரும் நிலையில், அடுத்தபடியாக படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. விஜய் சேதுபதி சமீபத்தில் வில்லனாக கமல்ஹாசனின் `விக்ரம்’ படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் இவர் தற்போது ஜவான் திரைப்படத்திலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த வாரங்களில் இப்படத்துக்கான படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் ராணா ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்துக்கு, விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆங்கில ஊடகமொன்றுக்கு இதுதொடர்பாக பேட்டியளித்த படக்குழுவை சேர்ந்த ஒருவர், “விஜய் சேதுபதி, இந்திய அளவில் முக்கியமான நடிகராகி இருக்கிறார். பான்-இந்தியா நடிகராக உயர்ந்துவரும் அவர், பல படங்களில் நடித்து வருவதால், அவருடைய கால்ஷீட் தேதிகள் தற்போது கிடைக்காமல் உள்ளது. அவை சரியானபின், மும்பையிலுள்ள ஜவான் படப்பிடிப்பு தளத்தில் அவரும் இணைந்துக்கொள்வார். முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்” என்று தெரிவித்துள்ளாராம்.
இந்தத் தகவல் கசிந்ததை தொடர்ந்து, முன்பொருமுறை ஷாருக்கான் விஜய்சேதுபதியை பாராட்டிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஷாருக்கான், விஜய்சேதுபதியிடம் “இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. நான் உங்களை பாராட்டப்போகிறேன். நான் என் வாழ்வில் பார்த்ததிலேயே, நீங்கள் மிகச்சிறந்த நடிகராக இருக்கிறார்” என்பார். இந்த வீடியோ, `சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கான வரவேற்பின்போது வந்திருந்தது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதியிடம் ஷாருக்கான் பேசியவைதான் இது.
இப்படத்தில் இணைவதன் மூலம், விஜய் சேதுபதியின் மார்க்கெட் இன்னும் உயருமென சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது. ஏற்கெனவே தென்னிந்திய அளவில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, அல்லு அர்ஜூன், மாதவன், சிரஞ்சீவி என முன்னனி சீனியர் நடிகர்களுடனெல்லாம் நடித்துவிட்டார் விஜய் சேதுபதி. இவை அனைத்தும் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களாகவே இருந்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து இப்போது `பாலிவுட் பாட்ஷாவிடமும் தன் வில்லத்தனத்தை காட்டி இந்திய அளவில் முகம் பதிக்கிறார் சேதுபதி’ என நெட்டிசன்கள் அவரது திரை உச்சத்தை பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
தற்போதைக்கு பாலிவுட்டில் கத்ரீனா கைஃபுடன் `மெர்ரி கிரிஸ்துமஸ்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. போலவே, தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது!