சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறபிக்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல மாதங்கள் கழித்து நேற்று (ஜூலை 5) கரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறபிக்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ” கரோனா தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலோ அல்லது 40 சதவீதத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு என்பது அவசியமாகும்.
தமிழகத்தில் நேற்று வரை 2662 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்தாலும் கூட மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.
எனவே தற்போதைய நிலையில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை , ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்களும் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.