இஸ்லாமாபாத் : ‘அரசியலில் தலையிடக் கூடாது’ என, பாக்., உளவுத் துறை தலைமை, அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 17ல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், பாக்., உளவுத்துறை தலையீடு உள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சித் தலைவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, தன் ஆட்சி கவிழ, ராணுவமும், அமெரிக்காவும் சேர்ந்து செய்த சதிதான் காரணம் என, இம்ரான் கான் கூறி வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் மாகாண இடைத்தேர்தலிலும், தங்கள் வெற்றியை தடுக்க, பாக்., ராணுவம், உளவுத்துறையுடன் கைகோர்த்து சதி செய்வதாக, இம்ரான் கான் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் பாக்., ராணுவ தலைமை தளபதி குமர் ஜாவேத் பஜ்வா, அனைத்து தளபதிகளுக்கும், அரசியலில் தலையிடக் கூடாது என, உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று பாக்., உளவுத்துறை டைரக்டர் ஜெனரல் நதீம் அன்ஜூம், தன் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், உளவுத் துறையினர் யாரும் அரசியலில் தலையிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி அரசியலில் தலையிடுவோருக்கு, உளவுத் துறையில் இடமில்லை எனவும், அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீபின் மகன் ஹம்சா ஷாபாஸ், பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளார். பெரும்பான்மை பலம் இல்லாத அவர் பதவி விலக இம்ரான் கான் கட்சி கோரி வருகிறது. நடக்க உள்ள இடைத்தேர்தல் முடிவுகள், ஹம்சா ஷாபாஸ் முதல்வராக தொடருவாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.