தேயிலை தோட்டப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழக – கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே கேரள பகுதியான மூணாறு, பூப்பாறை, பெரியகானல், சின்னகானல், லாக்காடு எஸ்டேட் போன்ற பகுதிகளில் தேயிலை தோட்டங்களும் ஏலத்தோட்டங்களும் அதிகமாக உள்ளன.
இங்கு, போடி, தேவாரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் தினந்தோறும் சென்றும் அங்கேயே தங்கியும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மூணாறு அருகே லாக்காடு தேயிலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்திருந்தது.
இதைகண்ட அப்பகுதி இளைஞர்கள் தங்களது செல்போன்களில் அந்த சிறுத்தையை படம் பிடித்தனர். அதனை கண்ட சிறுத்தை சட்டென்று மரத்தின் மீது இருந்து கீழே குதித்து அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து பகல் நேரத்திலேயே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வருவதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM