கடலூர்: உணவின்றி பசியால் மயங்கிக் கிடந்த சிறுவர்கள்- விசாரித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்

உணவின்றி மயங்கி விழுந்த இரண்டு சிறுவர்களை மீட்டு காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு சிறுவர்கள் சுற்றி திரிந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஆதரவின்றி, போதிய உணவின்றி மயங்கி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விருத்தாசலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
image
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு சிறுவர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் அண்ணன் தம்பிகள் எனவும், சின்ன சேலம் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் வேலாயுதம் காசி அம்மாள் தம்பதியின் மகன்கள் ஸ்ரீதர் (11), தங்கராசு (10), என்பது தெரியவந்தது.
நான்கு நாட்களுக்கு முன்பு தங்களது பெற்றோர் இருவரையும் விருத்தாசலம் பாலக்கரையில் விட்டு விட்டு ஆண்டிமடம் சென்றதாகவும் நான்கு நாட்களாக விருதாச்சலம் ஜங்ஷன் சாலை, ரயில் நிலையம், கோயில் ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. உடன் போலீசார் இருவரையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சிறுவர்களின் பெற்றோர்கள் யார், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவின்றி சிறுவர்கள் மயங்கி கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.