சென்னையில் மழை நீர் வடிகால் பணியை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்! மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த மழைக்காலம் தொடங்குவதற்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையில், மழைநீர் தேங்காதவாறு அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வல்லுநர் குழு அமைத்து, தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, மூலதன நிதி மற்றும் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதி போன்ற பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் ரூ.4,070 கோடி மதிப்பீட்டில் 1,033 கீ.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று ஜரூராக நடைபெற்று வருகின்றன. மேலும்,  கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப் பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்றும் 3 மாதங்களே உள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை துரிதமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக முதல்வர் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்,  குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் இழுத்தடித்து வந்த ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வரும், ஆர்.பி.பி. எண்டர்பிரைசஸ், பி.என்.சி. நிறுவனம், பி. பாஸ்கர் எண்டர்பிரைசஸ், ஜுனிதா எண்டர்பிரைசஸ், சண்முகவேல் எண்டர்பிரைசஸ், அபண்டா எண்டர்பிரைசஸ், ஜி.கே. எண்டர்பிரைசஸ், போஷன் எண்டர்பிரைசஸ் ஆகிய 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்காத காரணத்திற்காக இரண்டு நிறுவனத்திற்கு காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.