அதிமுக ஆட்சியில் பவர்புல்லாக வலம் வந்தவர் எஸ்.பி. வேலுமணி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலுமணி சம்மந்தப்பட்ட இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ரெய்டு நடத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பேசிய வேலுமணி,
“திமுகவுக்கு சாவுமணி அடிப்போம்.” என்று கூறியிருந்தார். அதன் பிறகு அவர் தொடர்புள்ள இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணையில் இறங்கியிருந்தது.
இந்நிலையில் வேலுமணியின் நிழலாக வலம் வரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, அவரின் தந்தை வீடு என்று அவர் சம்மந்தப்பட்ட 6 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
அதிமுக பொதுக்குழு நெருங்கும் நிலையில், எடப்பாடி அணியில் முக்கிய நபராக வலம் வரும் வேலுமணியின் நிழலான சந்திரசேகர் சம்மந்தப்பட்ட இடங்களில் நடக்கும் ரெய்டு அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வரி ஏய்ப்புப் புகார் இருந்தாலும், இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக சொல்லப்படுகிறது. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் யாருக்கு ஒப்பந்தம் வழங்குவது என்று முடிவு எடுக்கும் இடத்தில் இருந்தது சந்திரசேகர்தான் என்கிறார்கள். அதன் காரணமாகத்தான் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து ரெய்டும் நடத்தியிருந்தனர்.
ஆனால், வருமானவரித்துறை சோதனையை வேலுமணி தரப்பு துளியும் எதிர்பார்க்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டின்போது தொண்டர்களை கூட்டி உணவளித்து உபசரித்த நிலையில், இந்த முறை அவர்களின் வீடு காற்று வாங்கியது.
ரெய்டின் பின்னணி குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் அதிமுக பிரமுகர்களிடம் பேசினோம். “ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாக இருப்பது வேலுமணி தான். முதல் பொதுக்குழு தோல்வியில் முடிந்த நிலையில், இரண்டாவது பொதுக்குழுவை கோவையில் வெற்றிகரமாக நடத்தலாம் என்ற ஆலோசனை ஆரம்பத்தில் நடந்தது.
அதன் பின்னணியில் இருந்தது வேலுமணி தான். முதல் முறை அடைந்தத் தோல்வியை சரிகட்டும் விதமாக, பலமடங்கு வைட்டமின்களை இறக்கி இரண்டாவது பொதுக்குழுவில் வெற்றி பெற எடப்பாடி டீம் காய் நகர்த்தி வருகிறது.
அதை முடக்கும் விதமாக தான் இந்த ரெய்டு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதுமே அதிமுக படுதோல்வியை சந்தித்தது. கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 97 வார்டுகளில் திமுக தான் வெற்றி பெற்றது. அதிமுக வெற்றி பெற்ற மூன்று இடங்களில் 38வது வார்டும் ஒன்று.
சந்திரசேகரின் மனைவி சர்மிளா தான், இந்த வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவியேற்றுள்ளார். தேர்தலின்போது சந்திரசேகர் தரப்பு அடுத்தடுத்து ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் தான் சந்திரசேகரை குறிவைத்து ரெய்டு நடக்கிறது.” என்கின்றனர்.