கடவுள் காளி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் லீனா மணிமேகலை. அவர் தற்போது காளி என்ற ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கடும் எதிர்ப்பைப் பெற்றது. அதில், காளி வாயில் சிகரெட்டுடனும், தன் பாலினத்தவர்களான எல்ஜிபிடி சமூகத்தின் கொடியுடனும், மற்றொரு கையில் திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களுடனும் உள்ளபடி இருந்தது. இந்தப் போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “ஒவ்வொரு நபரும் கடவுளை அவரவர் வழியில் வழிபட உரிமை உண்டு. உதாரணமாக, பூடான் அல்லது சிக்கிம் சென்றால், அவர்கள் பூஜை செய்யும் போது, தங்கள் கடவுளுக்கு விஸ்கி கொடுக்கிறார்கள், உத்தர பிரதேச மாநிலத்திற்குச் சென்று கடவுளுக்கு பிரசாதமாக விஸ்கி கொடுங்கள் என்று சொன்னால், அது தெய்வ நிந்தனை என்று சொல்வார்கள்.
“என்னைப் பொறுத்தவரை, காளி தேவி இறைச்சி மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். தாராபித் (மேற்கு வங்கதின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலம்) பகுதிக்குச் சென்றால், சாதுக்கள் புகைபிடிப்பதைக் காண்பீர்கள். உங்கள் கடவுளை சைவமாகவும், வெள்ளை ஆடையாகவும் வழிபட உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவு எனக்கும் சுதந்திரம் உள்ளது” எனக் கூறினார்.
அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை அன்ஃபாலோ செய்துள்ளார்.
இதற்கிடையே, கடவுள் காளி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜக பிரமுகர் ஜிதன் சட்டர்ஜி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.