தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட தலைக்கவசம் அணிவதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான பயணம் செய்வது தொடர்கிறது. அத்தகைய நபர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
நெல்லை மாநகர போலீஸார் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டியது பற்றி தொடர்ச்சியாக விழிப்புஉணர்வு ஏற்படுத்துகிறார்கள். அத்துடன், பள்ளிக் குழந்தைகளிடம் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுவது பற்றி எடுத்துச் சொல்வதுடன், குழந்தைகளின் பெற்றோர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் விபத்துகளில் சிக்கும்போது பாதிப்பு அதிகமாகிறது என்பதை விளக்குகிறார்கள். அதனால் குழந்தைகள் பெற்றோருக்கு அது பற்றி தெரியப்படுத்தி ஹெல்மெட் அணியக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில், நெல்லை கிழக்கு மண்டல துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. நெல்லை மாநகரம் முருகன்குறிச்சி பகுதியில் வந்தவர்களை போலீஸார் மறித்து ஹெல்மெட் அணியாதவர்களை எச்சரித்ததுடன் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் நோட்டீஸ்களை விநியோகித்து அனுப்பி வைத்தார்கள்.
அதே சமயம், தலைக்கவசம் அணிந்தபடி வந்த வாகன ஓட்டிகளுக்கு துணை ஆணையர் ஸ்ரீனிவாசன், நெல்லையின் அடையாளமாகத் திகழும் அல்வா வழங்கி பாராட்டினார். கொளுத்தும் வெயிலில் சாலையில் வந்த வாகன ஓட்டிகள், தங்களுக்கு திடீரென அல்வா கிடைத்த மகிழ்ச்சியில் சென்றனர் தொடர்ந்து இதுபோன்று போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று துணை ஆணையர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, முருகன்குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து புறக்காவல் நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. துணை ஆணையர் அதைத் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கிருந்த பெண் காவலரை அழைத்துத் திறக்கச் செய்தார்.
பின்ன்ர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் ஸ்ரீனிவாசன், ”நெல்லையில் போக்குவரத்து தொடர்பான விபத்துகளைத் தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். சாலை விதிகளை மதிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால் வாகன ஓட்டிகளும் சாலை விதிமுறைகளைப் பின்பற்றி ஹெல்மெட் அணிவது உள்ளிட்டவற்றைக் கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.