மும்பை: மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் என்னிடம் உறுதி அளித்துள்ளனர் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தாணே மாவட்டத்திலுள்ள தனது சொந்த கிராமத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் இரவு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:
கடந்த 2 வாரங்களாக மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்தன. தற்போது அரசியல் குழப்பங்கள் தெளிவடைந்து புதிய அரசு அமைந்துள்ளது. மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன். ஒவ்வொரு தொகுதிக்கும் வளர்ச்சி நிதி, திட்டங்களை நான் உறுதி செய்வேன். இதன்மூலம் மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி இருக்கும்.
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் என்னிடம் உறுதி அளித்துள்ளனர். இந்துத்துவா கொள்கையை வலுப்படுத்த நான் சிறந்தவனாக இருப்பேன் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்தனர்.
நான் இப்போது எதையும் பேச விரும்பவில்லை. பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்த பின்னர் இதுகுறித்து மக்களிடம் நான் பேசுகிறேன். அநீதிக்கு எதிராக போராடுங்கள் என்று சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே எப்போதும் கூறுவார். எனது அரசியல் குருவான ஆனந்த் திகேவும் அதையேதான் வலியுறுத்துவார். நான்முதலில் மக்கள் தொண்டன். அதன் பின்னர் முதல்வர் எல்லாம். நான் உங்களில் ஒருவன். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதாக நான் உறுதி எடுத்துக் கொண்டால், அது நிறைவேறும் வரை என்னுடைய பேச்சையே கேட்கமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.