ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலத்தின் ஏடிஜிபி அம்ரித் பாலை குற்றப் புலனாய்வுத்துறை சிஐடி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் கடந்தாண்டு காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கை சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறுகையில், “எஸ்.ஐ. நியமன முறைகேட்டில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆவணங்கள் சிக்கியுள்ளன. இந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தப்ப முடியாது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது பேசிய சித்தராமையா, “காவல்துறை ஆட்சேர்ப்பு ஊழல் விவகாரத்தில் தனது பதவியை தொடரும் தார்மீக அதிகாரத்தை இழந்துவிட்டனர்” என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “இந்தச் சூழலுக்கு அரசாங்கமே நேரடியாகப் பொறுப்பு. முதலமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். முதல்வரும், மாநில உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்’ என்றார்.
“யாரையும் ராஜினாமா செய்யக் கோரும் தார்மீக உரிமை காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றது” என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.