புதுடெல்லி: டெல்லி பாஜக தலைவர் கபில் சர்மா, அஜ்மீரில் நுபுர் சர்மா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம்களின் இறைத்தூதரை விமர்சனம் செய்தார். இதற்காக, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதன் தாக்கமாக, உதய்பூரில் தையல் கடை நடத்தும் கன்னைய்யா லால் டெனி (40), கடந்த ஜூன் 28-ல் வெட்டிக்கொல்லப்பட்டார். இதேபோல், மகாராஷ்டிராவின் அமராவதியிலும் உமேஷ் கோல்கே (54) என்பவர் தம் முஸ்லிம் நண்பர் உள்ளிட்ட இருவரால் கொலை செய்யப்பட்டார்.
இதனிடையே உதய்பூரில் இறந்த கன்னைய்யா லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை பெற்றுத்தரும் பணியில் ஈடுபட்ட டெல்லி பாஜகவின் முக்கியத் தலைவரான கபில் சர்மாவுக்கு அக்பர் ஆலம் எனும் நபரிடமிருந்து வந்த ஒரு இ-மெயிலில், ‘உன்னை தீவிரவாதிகள் நீண்ட நாட்கள் விட்டு வைக்க மாட்டார்கள். எனது ஆள் கூட உன்னை சுட்டுத் தள்ளுவான்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை டெல்லி காவல் துறை ஆணையருக்கு இணைத்து கபில் சர்மா ட்விட்டரில் பதிவிட்டு புகாரளித்துள்ளார்.
இதேவகையில், அஜ்மீரின் காஜா கரீப் நவாஸ் தர்காவின் காதீமான சல்மான் ஜிஷ்தி, நுபுரின் தலையை கொய்து வருவோருக்கு ரொக்கப் பரிசுடன் தனது வீட்டையும் எழுதித் தருவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதே வகையில், அஜ்மீர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான பானு பிரதாப் சிங் சவுகானின் கழுத்து வெட்டப்படும் எனவும் மிரட்டல் வந்துள்ளது. இவர், நாடு முழுவதிலும் நுபுரின் தாக்கம் மீதான ஒரு விவாதத்தில் சில தினங்களுக்கு முன்பு யூடியூப் விவாதத்தில் பங்கேற்றிருந்தார். இதையடுத்து அதில் இடப்பட்ட ஒரு கருத்து பதிவில், ‘உனது தலையும் வெட்டப்படும்’ என ஷோஹில் சையத் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அஜ்மீரின் ஏஎஸ்பியான விகாஸ் சங்வான் கூறும்போது, ‘அஜ்மீரின் 2 மிரட்டல்கள் மீது வழக்குகள் பதிவாகி விசாரிக்கப்படுகின்றன. தலைமறைவான சல்மான் ஜிஷ்தி காஷ்மீரில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஷோஹில் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை. வழக்கறிஞர் பானு பிரதாப்புக்கு பாதுகாப்பும் அளிக்கப்படும்’ என்றார்.