தான் காதலித்து வந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவன். பொது இடத்தில் அரங்கேரிய வன்முறை தாக்குதல்.
வேலூர் மாவட்டம் குப்பாத்தா மோட்டூர் பகுதியை சேர்ந்த சத்தீஷ்குமார் (20). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ டெக்னீசியன் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண் யாசினி. இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மெடிக்கல் ரெக்காட்ஸ் படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இது தொடர்பாக சத்தீஷ்குமார் வீட்டார், பெண் கேட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக சத்தீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், இன்று காலை இருவரும் கல்லூரி செல்ல திருவலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த பிள்ளையார் கோவில் எதிரில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தீஷ்குமார் அந்த பெண்ணை, தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் திடீரென கழுத்தில் குத்தியுள்ளார். இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்த அப்பெண் யாசினி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், பெண்ணை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவலம் காவல் துறையினர் கல்லூரி மாணவன் சத்தீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சத்தீஷ்குமாருக்கும், யாசினிக்கும் ஏற்கெனவே ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM