“மாடலிங்” ஆக தன்னை அறிமுகப்படுத்தி முகநூலின் ஊடாக பாடசாலை மாணவிகளை ஏமாற்றிய இராணுவ வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன் தினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாண புகைப்படங்களை எடுத்து அவற்றை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவ முகாமின் உதைபந்தாட்ட அணியில் அங்கம் வகிக்கும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.
இந்த இராணுவ வீரர் நீண்டகாலமாக இந்தச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இராணுவ வீரர் பாடசாலை மாணவிகளின் முகநூல் கணக்குகளில் அதிக கவனம் செலுத்தி அவர்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் கண்டறிந்து மாடல் போன்று நடித்து பாடசாலை மாணவிகளை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இராணுவ வீரர் மிக நுணுக்கமாக இந்த மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார். தான் குறிவைக்கும் மாணவியின் நண்பியின் முகநூல் கணக்கை ஹேக் செய்வது தான் முதலில் செய்யும் வேலை. பின்னர் அந்த தோழியை போல் நடித்து மாணவிக்கு மெசேஜ் அனுப்புகிறான். “எனக்குத் தெரிந்த மாடலிங் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களிடம் பேசுவார். அவருடன் இணைந்தால் மாடலிங் ஆகலாம். பயப்படாதே. அவர் நம்பகமானவர்.” என்று அது போன்ற விடயங்கள் முதலில் மெசேஜாக அனுப்பப்படும். பின்னர், மாடலிங் ஆக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த மாணவியிடம் முகநூல் மூலம், இந்த இராணுவ வீரர் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டுள்ளான்.அவன் முகநூல் ஊடாக மாணவியின் புகைப்படத்தை கேட்டுள்ளான். பின்னர் வெவ்வேறு கோணங்களில் 50க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து கடைசியில் மாணவிக்கு தெரியாமலே நிர்வாணமாக புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அந்த நிர்வாணப் புகைப்படங்கள் கிடைத்ததும் மாணவிகளிடம் கதைத்து அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் வலையில் சிக்கிய கம்பஹா, கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும் அவனது வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை வரவு வைத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்தே குறித்த மாணவி பணத்தை வைப்புச் செய்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மூவரினால் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னரே குருநாகலில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த மாணவிகளில் ஒருவரை சந்திக்க குருநாகலைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளான். அதற்கு அமைய அவனை கைது செய்வது எளிதாகிவிட்டது. அன்றைய தினம் குருநாகல் ஹோட்டல் ஒன்றில் மாணவியுடன் இரவைக் கழிக்க அவன் தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபரான இராணுவ வீரர் இருபத்தி ஆறு வயதை உடையவன். அவன் கால்பந்து விளையாடுவதறாகவே இராணுவத்தில் சேர்ந்துள்ளான்.
போயகனே இராணுவ முகாம் உதைபந்தாட்ட அணியில் அங்கம் வகிக்கும் இவரின் கைத்தொலைபேசியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பெற்று சோதனையிட்டதில் பாடசாலை மாணவிகள் என சந்தேகிக்கப்படும் 20 மாணவிகளின் புகைப்படங்கள் பல கிடைத்துள்ளன.