சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அதிமுகவை கைப்பற்ற நடக்கும் இபிஎஸ், ஓபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் வரும் 11ந்தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இதை தடுக்க ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்தையும் எடப்பாடி தரப்பு எதிர்கொண்டு, முறியடித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவும் எடப்பாடிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இதனால், வரும் 11ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், ஆனால் ஜூலை 11ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திங்கள் மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை இன்று (புதன் கிழமை) விசாரிப்பதாக அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொதுக்குழு தொடர்பாக எந்த வித உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு சுட்டிக்காட்டியது.
இதையடுத்து ஒபிஎஸ் தரப்பை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய இபிஎஸ் தரப்புக்கு உத்தரவு பிறப்பித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பின்பு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.