கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோக். பா.ஜ.க பிரமுகரான இவர் கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் ஓர் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து அசோக்கிடம் பேசியபோது, “தெரிந்த ஒருவர், முத்ரா திட்டத்தில் கடன் வாங்கித் தருபவர் என சொல்லி ஒருவரின் எண் அனுப்பினார்.
அதில் பேசிய போது, ‘நாங்கள் பெங்களூரில் இருக்கிறோம். முத்ரா திட்டத்தில் கடன் வாங்கிக் கொடுக்கிறோம்,’ என்றனர். அதற்காக என்னுடைய ஆவணங்களை அனுப்பச் சொன்னார்கள்.
பிறகு எனக்கு ரூ.60,000 – 10 லட்சம் வரை கடன் தகுதியாக இருப்பதாக கூறினர். நான் ரூ.10 லட்சம் கடன் கேட்டேன். இதற்கு ரூ.850 பிராசஸிங் ஃபீஸ் கட்ட சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி நானும் கட்டிவிட்டேன்.
அதற்கு கடன் அப்ரூவ் ஆகிவிட்டதாக மோடி படத்துடன் ஓர் கடிதம் அனுப்பினர். மீண்டும் ரூ.5,500 கட்ட கூறினார்கள். சந்தேம் வந்து விசாரித்தபோது, அது போலியான மோசடி கும்பல் என்று தெரியவந்தது.
இதேபோல் பலரிடம் முத்ரா திட்டத்தில் கடன் வாங்கித் தருவதாக சொல்லி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வாட்ஸப்பில் பலருக்கும் விழிப்புணர்வு செய்தி அனுப்பியுள்ளேன். அதேபோல, சைபர் க்ரைம் போலீஸிலும் புகார் அளித்திருக்கிறேன். அந்த மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.
உஷார் மக்களே உஷார்!