இது எந்த வகையிலும் நியாயமல்ல, உடனே ரத்து செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும்: உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சமையல் எரிவாயு விலை  மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை ரூ.1000ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல்  தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.

சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில்  12 முறை உயர்த்தப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டில் ரூ.710 ஆக இருந்த உருளை விலை இதுவரை ரூ.358 உயர்த்தப்பட்டிருக்கிறது. 

இது 50.44% உயர்வு ஆகும். இவ்வளவு விலை உயர்வை ஏழை, நடுத்தர மக்களால்  தாங்கிக் கொள்ள முடியாது!

உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை உயரவில்லை. இந்தியாவில் இன்று கூட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8.50 குறைக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சியாகும்.  உலக சந்தையில் விலை குறையும் போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன்?

உஜ்வாலா வகை இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு மானியத்தை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், விலை உயர்த்தப்படுவது மக்களுக்கு நன்மை பயக்காது. விலை உயர்வை ரத்து செய்து விட்டு, மக்களுக்கு அரசு மானியம் வழங்க  வேண்டும்” என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.