கர்நாடக கடலோர பகுதிகளில் தொடர் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

மங்களூரு: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இடைவிடாது தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பண்ட்வால் அருகே கஜேபையலுவில் நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

ெதன்மேற்கு பருவமழை தீவிரம்

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் ஆகிய பகுதிகளில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தலைநகர் பெங்களூருவில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும், சாரல் மழையும் இருந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குடகு, தட்சிண கன்னடா, உத்தரகன்னடா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குடகில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், காவிரி, ஹேமாவதி, துங்கா, பத்ரா, குமாரதாரா, நேத்ராவதி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மரம், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பல கிராமங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

உடுப்பி மாவட்டம் பைந்தூரில் சவுபர்ணிகா ஆற்றில் அபாயகட்டத்தை தாண்டி ெவள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக பைந்தூர் அருகே உள்ள நாகுந்தா கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் அந்தப்பகுதி மக்களால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. மேலும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

3 தொழிலாளர்கள் பலி

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கஜேபையலு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், பலியானவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிஜூ (வயது 45), ஆலப்புழாவை சேர்ந்த சந்தோஷ் அல்போன்ஸ் (46), கோட்டயத்தை சேர்ந்த பாபு (46) என்பதும், மீட்கப்பட்டவர் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஜானி (44) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் அந்தப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது தொடர் கனமழை காரணமாக வீட்டை ஒட்டி உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடு மண்ணில் மூழ்கியது. இதில் 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. பண்ட்வால் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். மண்ணுக்குள் சிக்கிய ஒருவரை பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பலியான 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் விரிசல்

தொடர் கனமழை காரணமாக மங்களூரு விமான நிலைய ஓடுபாதை அமைந்துள்ள அட்யப்பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அட்யப்பாடியில் இருந்து கைகம்பா செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் விமான நிலையத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்ட்வால் தாலுகா பஞ்சிகல்லு பகுதியில் 100 அடி நீளத்துக்கு திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது 3½ அடி ஆழம் இருப்பதாக தெரிகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதேபோல், உத்தரகன்னடா மாவட்டத்திலும் நிலச்சரிவாலும், வெள்ளப்பெருக்காலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால், பட்டப்பாடி பகுதியில் அரபிக்கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. மேலும் அந்தப்பகுதியில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

அருவிகளில் வெள்ளம்

சிக்கமகளூருவில் கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியின் உடலை 4-வது நாளாக நேற்றும் தேடும் பணி நடந்தது. சிக்கமகளூரு மாவட்டத்தில் ெதாடர் கனமழையால் சிரிமனே, கல்லத்தி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் பாபாபுடன்கிரி, முல்லையங்கிரி மலைப்பகுதியில் புதிது, புதிதாக அருவிகள் தோன்றி உள்ளன. மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. சிவமொக்கா, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கனமழையால் சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்தும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

தொடர் விடுமுறை

குடகு மாவட்டம் செட்டஹள்ளி பகுதியில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ெபரிய, பெரிய பாறைகள் சாலையில் உருண்டு வந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் பல இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று சிவமொக்கா, தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சிக்கமகளூரு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய 3 மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணாவில் வெள்ளப்பெருக்கு

மராட்டியத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கிருஷ்ணா ஆறு வழியாக கர்நாடக மாநிலம் யாதகிரியில் உள்ள பசவசாகர் அணைக்கு வருகிறது. இதனால் பசவசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. அத்துடன் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தூத்கங்கா, வேதகங்கா ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஆற்றங்கரையோரத்தில் உள்ள சிக்கோடி, ராயபாக், அதானி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணை

குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜா சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 118.20 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரத்து 608 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாகவும், திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாகவும் உள்ளதால் கே.ஆர்.எஸ். அணை வேகமாக நிரம்பி வருகிறது. கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 6.60 அடி மட்டுமே பாக்கி உள்ளது.

கபினி அணை

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,278.30 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 656 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணை நிரம்பவும் இன்னும் 6 அடி பாக்கி உள்ளது.

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.