எழுத்தாளர், அரசியல் கட்சியின் முக்கித் தலைவர், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் என பன்முக ஆளுமையைக் கொண்டவர் எழுத்தாளர் திலகபாமா. இவர் தமிழ் இலக்கியச் சூழலில் 10 கவிதைத் தொகுப்புகளும் 2 நாவல்களும் 3 சிறுகதைத் தொகுப்புகளும் 2 கட்டுரை நூல்களும், மேலும், தமிழின் ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகளான சௌந்தரபாண்டியனார், பொன்னம்மாள் அவர்களுடைய வாழ்வியல் சரிதத்தையும் எழுதியிருக்கிறார். கல்லூரிகளில் 10-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நிகழ்த்தியிருக்கிறார். சிவகாசியில் உள்ள மதி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக செயல்பட்டு வருகிறார். எழுத்தாளர் திலகபாமாவிடம் தற்போதைய தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் தொலைபேசி வழியாக பேசினோம். பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துப் பேசினார். அவருடனான உரையாடலை இங்கே தருகிறோம்.
கேள்வி: ஒரு இலக்கியவாதியாகவும் அரசியல்வாதியாகவும் பயனிப்பது எப்படி இருக்கிறது?
திலகபாமா: என்னவெல்லாம் யோசிக்கிறோமோ அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. மக்களைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்வது இலக்கியத்திற்கு ரொம்ப முக்கியம். சமூகத்தின் உளவியலைத் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அந்த உளவியலை உற்றுப் பார்ப்பதற்கு இந்த அரசியல் பயனம் உதவியாக இருக்கிறது.
கேள்வி: பொதுவாக தமிழ் இலக்கிய சூழலில் நிறைய குழுக்களாக செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், நீங்கள் எந்த குழுக்களிலும் இல்லை. பாமக குழுக்களில்கூட இல்லையே?
திலகபாமா: தனித்துவமாக இருக்கிறோம் என்பது நான் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். குழு சார்ந்து இயங்குவது ஒரு ஆக்கப்பூர்வமான படைப்பாளிக்கு அல்லது நிஜமான படைப்பாளிக்கு சாத்தியமில்லை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், படைப்பாளி தானே உருவாக்கிய ஒரு விஷயத்தைக்கூட, உருவாக்கி முடித்துவிட்டு கடந்து செல்பவன். அதை வைத்து ஒரு பீடம் வைத்து மேடை போட்டு அரசிலை நிகழ்த்துபவன் படைப்பாளியாக இருக்க முடியாது. அதனால், அதை கடந்துபோய்க்கொண்டிருப்பதால் எந்த குழுவிலும் நான் இல்லாமல் இருக்கிறேன். ஆனால், எல்லாக் குழுவும் மறுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் அப்பால் திலகபாமா என்றால் யார் என்று ஒரு மதிப்பீடு வைத்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: இலக்கிய உலகில் ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு குழுவாக இயங்குவதில் சில சாதகங்கள் இருக்கிறது இல்லையா? அதை தவறவிட்டுவிட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?
திலகபாமா: சிலருக்கு குழுவாக இயங்குவது தேவைப்படுகிறது. தனக்கு ஆதரவாளர்களை வைத்துக்கொள்வதால், அதனுடைய சாதக பாதகங்களை அனுபவிப்பதும், தான் சொல்வதை 10 பேர் சரி என்று சொல்வதும் என்பதை ஒரு படைப்பாளி ஒரு மோனோடொனஸாக (Monotonous) பண்ணமாட்டான். ஒரு படைப்பாளியால் அப்படி பண்ண முடியாது. படைப்பாளியாக இயங்குவதற்கு என்ன செய்வானோ அதை செய்வான். அப்போது, அவன் இன்னொரு தளத்துக்கு மாறிப் போய்விடுவான்.
கேள்வி: பாமக குழுக்கள் கூட உங்களை, உங்கள் எழுத்துகளை பேசுவதாக தெரியவில்லையே?
திலகபாமா: எழுத்து மட்டும்தான் என்னை முன்னிலைப்படுத்த வேண்டும். வேறு யார் என்னை முன்னிலைப்படுத்த வேண்டும்? அவர்கள் பேசுவது போல, இல்லை என்றால், அது அவர்களுக்கு உடன்பாடாக இல்லை என்று அர்த்தம் ஆகிறது. அது என் தவறு இல்லையே. அதற்கு நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனக்கு எது உண்மை என்று நம்புகிறேனோ, அதை கொடுத்துவிட்டு போகிறேன். அதை காலம் தீர்மானிக்கட்டும். அதை காலம் தூக்கிப்போட வேண்டிய இடத்தில் இருக்கிறது என்றால், அதற்கும் நாம் ஒப்புதலுடன்தான் இருக்க வேண்டும்.
கேள்வி: தமிழ் இலக்கியச் சூழல் இப்போது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
திலகபாமா: தமிழ் இலக்கியச் சூழல் ரொம்ப நீர்த்துப்போய்விட்டது. தீவிர இலக்கியவாதிகள் என்று ஒரு பெரிய குழு இருந்தது. அவர்கள் வைத்ததுதான் இலக்கியப் பட்டியல், புதியதாக உருவாகிற வகைமைபாடுகள் பட்டியல், எழுத்தில் எவ்வளவு பரீட்சார்த்த முயற்சிகள் இருக்கிறது என்பதையெல்லாம் பற்றி சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் ஒரு தளம் இருந்தது. இன்றைக்கு அது இல்லவே இல்லை. சமூக ஊடகங்கள் அதை முழுக்க அழித்துவிட்டது என்று நான் நம்புகிறேன். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானலும் எழுதலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம், யார் எழுதுவதையும் ஒரு நூறு, இருநூறு லைக் மூலமாக ஆகச் சிறந்ததாக மாற்றிவிடலாம் என்பதன் மூலமாக ஒரு போலித்தனம் உருவாகிக்கொண்டிருக்கிறது. நுட்பமாக எழுதுகிற யாரும் இதற்காக மெனக்கிடமாட்டார்கள். இதையெல்லாம், நிஜ படைப்பாளிகள் எங்கோ ஓரமாக ஒதுங்கி நின்றுபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே பாப்புலராக பேசப்படுகிற வட்டங்களுக்குள் அவர்கள் இல்லவே இல்லை. உண்மையில், ஒரு தேக்க நிலையில்தான் இலக்கியம் இருந்துகொண்டிருக்கிறது. இன்னும் அது பேசப்பட வேண்டும்.
அதே நேரத்தில், புதுசா எழுதுகிறவர்கள், நான் இதுவரைக்கும் எது படைப்பு என்று நம்பவில்லையோ, அதைத் தாண்டிய விஷயங்களை செய்துபார்க்கிற ஆட்களும் புதுசா உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் பழைய அளவுகோல்களை எல்லாம் தூக்கி வைத்துவிட்டு, என்ன செய்கிறார்கள் என்று உற்று நோக்க வேண்டியவர்களாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம். இதில் பலவீனமான பகுதி என்னவென்றால், இலக்கியம் குறித்து சரியான விஷயங்களை தமிழ் இலக்கிய கல்விப் புலங்களில் இருக்கிற விமர்சகர்களும், ஆளுமைகளும் செய்ய வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தைக் கல்விப் புலங்களில் இளைய தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால், அந்த இடம் வெற்றிடமாக இருந்துகொண்டிருக்கிறது.
படைப்பாளி இந்த சமூகத்தில் இருந்து வேறுபட்டு ஒரு இடத்தைப் பார்ப்பான். அது சாமானியனுக்கு புதிய பார்வையாகவும் சில நேரங்களில் அவனால் யோசிக்கவே முடியாத ஒன்றாகவும் அமைந்துவிடும். ஆனால், அந்த இடத்தை கல்விப் புலத்தில் இருக்கிற இலக்கிய ஆளுமைகள் அதை வாசித்து இந்த சமுதாயத்திற்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த இடம் இன்று வெற்றிடமாக இருப்பதாகப் பார்க்கிறேன்.
கேள்வி: உங்கள் முகநூலில் தொடர்ந்து நிசும்பசூதனி என்ற பெயரில் எழுதுகிறீர்கள்? நிசும்பசூதனி என்பது என்ன? இந்த பெயரை எப்படி தேர்வு செய்தீர்கள்?
திலகபாமா: நான் ஒருநாள் புதுக்கோட்டை அருங்காட்சியகத்துக்கு போயிருந்தபோது, ஒரு சிலைக்கு முன்னாடி இருந்த நிசும்பசூதனி என்கிற பெயர் என்னை ஈர்த்தது. அப்போது இதுவரைக்கும் இல்லாத விஷயத்தைப் பேசுவதற்கு அந்த பெயரில் கொண்டுபோவது எனக்கு இலகுவாக இருந்தது. அந்த பெயர் எனக்குள் ஒட்டிக்கொண்டதால், நான் எழுதிய கதைகளில்தான் முதலில் நிசும்பசூதனி ஊடாடத் தொடங்கியது. நிசும்பசூதனியும் வேதாளமும் என்ற சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது.
அதற்கு பிறகு, அவ்வப்போது சில விஷயங்களைப் பேசுவதற்கு நிசும்பசூதனி என்ற பெயர் எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. நான் நிசும்பசூதனியை பெண்ணின் ஒரு ஆளுமையான வடிவமாகப் பார்க்கிறேன். நிசும்பசூதனி என்பவள் காளி, விக்ரமாதித்தனுடைய கடவுள். தஞ்சாவூரில்கூட நிசும்பசூதனி சிலை இருப்பதாக சொல்கிறார்கள்.
கேள்வி: கொஞ்சம் அரசியலாகப் பேசலாம்; அண்மையில் பாமக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கக் கோரி போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. பாமக எதுவெல்லாம் அரசு நிறைவேற்றும் என்று தெரிந்து அந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறதா? எல்லாம் எங்களால்தான் என உரிமை கோருகிறதா? நீட் பூரண மதுவிலக்கு போன்ற மற்ற விஷயங்களில் பாமக இது போல சொல்ல முடியவில்லையே?
திலகபாமா: பாமக ஒரு விஷயத்தில் வென்றுவிட்டது என்று சொல்வதற்கு உங்கள் யாருக்கும் உடன்பாடு இல்லை. அதற்கு இவ்வளவு அர்த்தங்களை கற்பிக்கிறீர்கள். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க கோரி, பாமக இன்று நேற்றல்ல, 2017-இல் இருந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதனால், தற்கொலைகள் அதிகமாகும்போது, இப்போதும்கூட களத்தில் இறங்கவில்லை என்றால் எப்போது என்று களத்தில் இறங்குகிறோம். களத்தில் இறங்கவில்லை என்றால், நீங்கள் என்ன இதற்கெல்லாம் போராட மாட்டீர்களா என்று கேள்வி. போராடினால், தீர்வு வரப்போகிறது என்று தெரிந்துதான் போராடினீர்களா? வெற்றிக்கு உரிமை கோருவதற்காக போராடினீர்களா என்று ஒரு கேள்வி, திமுக நீங்கள் சொன்னதால்தான் செய்ததா என்றும் கேள்வி வைக்கிறார்கள். இது எல்லாமே, எது நடந்தாலும் சந்தேகம்கொள்கிற மனநிலையில் நமது தமிழ்ச்சூழல் இருக்கிறது என்பதுதான் உண்மை.
கேள்வி: பூரண மதுவிலக்கு கோரிக்கை என்றைக்கும் இருக்க வேண்டும் என்று பாமக நினைக்கிறதா? ஏனென்றால், வன்னியர் இட ஒதுக்கீடுக்கு போராடியதைப் போல பூரண மதுவிலக்குக்கு போராடவில்லையே?
திலகபாமா: வன்னியர் இடஒதுக்கீடு என்பது 40 ஆண்டு கால போராட்டம், எந்த கோரிக்கையை எந்த சந்தர்ப்பத்தில் அதைப் பழுக்க வைக்க முடியுமோ, அந்த இடத்துக்கு விரைவாக நகர்த்தக்கூடிய விஷயத்தை பாமக கையில் எடுக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அது பழுக்கும் என்பதால் அதைக் கையில் எடுக்கிறது. இதனால்தான், உங்களுக்கு இது போல தோன்றுகிறது. இவர்கள் வெற்றி பெறும் விஷயங்களுக்கு உரிமை கோருகிறார்களோ என்று உங்களுக்கு தோன்றுகிறது.
மதுவிலக்கு என்பது புரையோடிப்போன ஒன்றாக வைத்திருக்கிறார்கள். அதாவது கொஞ்சம்கூட தயக்கம் இல்லாமல், மதுக்கடைகள் நடத்துவதை அரசு கொள்கையாக வைத்துள்ளது. பூரண மதுவிலக்குக்காக சில பணிகளை செய்து, அதை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்திகொண்டு போக வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். அதனால், இன்றைக்கு போராட்டங்கள் நடத்துவதைவிட நாம் அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் மதுவிலக்கை சாத்தியப்படுத்த முடியும் என்ற இடத்தில்தான் இருக்கிறது. அதனால், கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சில போராட்டங்களை உடனே செய்ய வேண்டியிருக்கிறது. சில போராட்டங்களுக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது.
கேள்வி: பாமக இளைஞரணி செயலாளராக இருந்த அன்புமணி ராமதாஸ், பாமக தலைவராகியிருக்கிறார். அன்புமணி தலைமையில் பாமக எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?
திலகபாமா: அன்புமணியின் தலைமை சிறப்பானதாக இருக்கும். தமிழக அரசியலில் 50 ஆண்டுகளாக பழக்கப்பட்டு இருக்கிற ஒன்றை காலி செய்துவிட்டு வேறு ஒரு தளத்திற்கு மாறும் என்று நான் நம்புகிறேன். ஒரு புது அரசியலை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தும். ஆனால், வழக்கம் போல, ஒரு புதிய விஷயத்தைக் கையில் எடுக்கும்போது, சந்தேகம் கொள்ளும் மன நிலையில் இருக்கிறார்கள். நல்லவர்கள் என்று சொல்கிற எல்லோர் மீதும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. யார் மீதும் அவநம்பிக்கையான பார்வையை வைத்திருக்கிறார்கள். இந்த அவநம்பிக்கையான பார்வை சிக்கல்தான் பாமகவுக்கு மிகப்பெரிய எதிரி. இதை வென்றெடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் தொடர்ச்சியான செயல்பாடுகள் சில விஷயத்தை நிறுவும். அதற்கான வழியைத்தான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கையில் எடுத்திருக்கிறார்.
கேள்வி: தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும், அன்புமணி முதலமைச்சராவார் என்று பாமக கூறுகிறது. ஆனால், அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, இப்படிதானே பாமக இருக்கிறது?
திலகபாமா: இன்றைக்கு அரசியல் சூழல் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிகொள்வதாக இருக்கிறதே ஒழிய, சினிமா மாதிரி உணர்வு ரீதியாக உடனே கிளம்பி வருகிற சூழல் எல்லாம் இல்லை. நியாயமானப் போராட்டங்கள்கூட இன்றைக்கு போராட்டங்களாக நடத்தப்படவில்லை. அது போலித்தனங்களாக தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகளால் நிறுவப்பட்டுவிட்டது. சும்மா ஒரு போராட்டம், கத்துவார்கள் போய்விடுவார்கள். அதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்கிற தொனி வந்துவிட்டது. அந்த இடத்தில் இருந்துகொண்டு நியாயமான அரசியலை செய்வது என்பது மிகப்பெரிய சவால்தான்.
கேள்வி: அண்மையில், பாமக ஒரு பொதுக்கட்சியாக மாறி எல்லாருக்குமான கட்சியாக செயல்படும் என்று அன்புமணி, ராமதாஸ் இருவருமே சொல்லியிருக்கிறார்கள். அப்படியான ஒரு கட்சி, ஒரு பக்கம் வன்னியர் சங்கத்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பாமக என அரசியல் கட்சி நடத்துவது முரணாக இல்லையா?
திலகபாமா: சரி நான் கேட்கிறேன். இன்றைக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் என்ன நோட்டீஸ் அடித்து ஒட்டினார்கள். இங்கே எங்கே சாதியம் இல்லாமல் இருக்கிறது. அதிமுக எல்லாருக்குமான கட்சியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவில் இன்றைக்கு மறவர் சமூகமா, கவுண்டர் சமூகமா என்ற சண்டை நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் தங்கள் இடத்தைப் பிடிப்பதற்காக மறைமுகமாக சாதிய மோதலை பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாமக ஒரு நாளும் சமூகங்களுக்கு இடையே சண்டையை உருவாக்கியதே இல்லை. திருமாவளவனுடன் நட்பில் இருந்த காலம் தொட்டு இன்றைக்கு வரைக்கும் யார் தவறு செய்தாலும் தவறு என்று சொல்கிற இடத்தில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிற, பெரும்பான்மை சமூகமாக இருக்கிற தான் சார்ந்த சமூகத்தை வளர்த்தெடுக்கிற நிலையில் இருக்கிறது. தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் பெரும்பான்மை சமூகமாக இருக்கிற சமூகம் நன்றாக இருக்க வேண்டும். உடம்பில் பெரும்பான்மைப் பகுதி நோயாக இருக்கட்டும், சிறுபான்மை பகுதி மட்டும் சரியாக இருந்தால் போதும் என்றால் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும். அதனால், தமிழ்ச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதற்குத்தான், பாமக பாடுபடுகிறதே ஒழிய, வன்னியர்களுக்கு மட்டும்தான் எல்லாம், மற்றவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிடுவோம் என்று பாமக ஒரு நாளும் பேசியது இல்லை. அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு எல்லாவற்றுக்கும் குரல்கொடுத்தது. இப்போதும்கூட பாமக, அனைத்து சமுதாய மக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைக்கிறது. அதையும்கூட மருத்துவர் ஐயா ராமதாஸ் இடஒதுக்கீடு என்று சொல்லாமல் இடப்பங்கீடு என்று திரும்பத்திரும்பச் சொன்னார். ஆனால், அதில் சந்தேகம் கொள்கிறார்கள். ஒரு நல்ல விஷயம், அடுத்த தலைமுறையை நோக்கி வடிவமைக்கிற விஷயத்தை முதலில் இந்த சமுதாயம் சந்தேகப்படும். கோபப்படும். தொடர்ச்சியாக வலியுறுத்துகிறபோது அதை ஒப்புக்கொள்ளும். அந்த காலம் கனிவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதை நோக்கி தொடர்ச்சியாக பயனத்தில் இருக்கிறோம்.
பாமக சாதிக் கட்சி என்று சொல்கிறார்கள். எல்லா கட்சிக்குள்ளும் சாதிய ஒடுக்குதல்கள் எல்லாமே இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது பாமகவை நோக்கி மட்டும் சுட்டுகிறபோது, அது வெறுப்பு அரசியலை வளர்க்கிற ஒரு முயற்சியாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன்.
கேள்வி: எல்லாக் கட்சிகளும் சாதிய ஒடுக்குமுறை இருக்கிறது என்பதன் மூலம் நாம் அதை இயல்பாக்கி (Normalize) சாதிய ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்கிறோமா?
திலகபாமா: விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்றைக்கு நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். பாரதப் பிரதமராக வருவார் என்று நோட்டீஸ் ஒட்ட முடிகிறது. தமிழகத்தின் முதல்வராக வருவார் என்று அவர்கள் கட்சியின் தலைவரை சொல்லமுடியவில்லை இல்லையா? விடுதலைச் சிறுத்தைகளின் முதல்வரே என்று மட்டும்தானே என்று சொல்ல முடிகிறது. ஆனால், பாமகதான் முதன்முதலில் ஒரு தலித்துக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கி கொடுப்பதற்கு முன்னின்றது. தலித் எழில்மலைக்குத்தான் முதலில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
கேள்வி: ஆனால், அவர்கள் எல்லாமே விமர்சனங்களை வைத்துவிட்டுதானே வெளியேறினார்கள்?
திலகபாமா: அரசியலில் எல்லாருமே தங்களுக்கான பதவிகளும், அவர்களுக்கான இருப்பையும் மட்டும்தானே யோசிக்கிறார்கள். ஒரு நல்ல இயக்கம், தொடர்ச்சியாக செயல்படுகிற இயக்கம் மீது அவநம்பிக்கை கொள்கிறவர்கள் கழண்டு போய்விட்டார்கள். வெளியே போனவர்கள் ஆளுமையாக மாறினார்களா? பாமகவில் இருந்து விமர்சனங்களை வைத்துவிட்டு வெளியேறியவர்கள் யாராவது ஆளுமையாக மாறினார்களா? அப்படி அவர்கள் ஆளுமையாக மாறியிருந்தால், அவர்கள் பாமகவுக்கு எதிராக வைத்த விமர்சனம் சரியானதா என்று யோசிக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாருமே காணாமல் போய்விட்டார்கள். பாமக அவர்களைத் தாங்கிப்பிடித்திருக்கிறது. அருமையான விஷயங்களை செய்துகொடுத்திருக்கிறது. பாமக எல்லா சமுதாயத்தினருக்கும் இடம் கொடுத்திருக்கிறது. அவர்கள் அதை பயன்படுத்தத் தவறுகிறார்கள்.
விமர்சனம் வைத்துவிட்டு வெளியே போனவர்களால் ஒரு ஆளுமையாக தலைவராக மாறமுடியவில்லை. பாமகவின் முன்னாள் தலைவராக இருந்த தீரன் விமர்சனங்களை வைத்துவிட்டு வெளியே போன பிறகு அவரால் என்ன செய்ய முடிந்தது.
பாமக எல்லோரையும் இருகரம் நீட்டி வரவேற்கத் தயாராக இருக்கிறது. அவர்கள் நல்ல அரசியலுக்கு உடன்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.
கேள்வி: அண்மையில், கும்பகோணம் அருகே துலுக்க வேலியில் இரட்டை ஆணவக் கொலை நடந்தது. இதுவரை நடந்த ஆணவக் கொலைகளில் பெரும்பாலும் தலித்துகள் பாதிக்கப்படுபவர்களாக இருந்துள்ளது. ஆனால், இந்த ஆணவக் கொலை பட்டியல் இனத்தைச் சேர்ந்தர்வர்கள் செய்துள்ளனர். ஆணவக்கொலையால் எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் ஒரு பொது ஆபத்தாக மாறியுள்ளது. பாமக ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர குரல் கொடுக்குமா?
திலகபாமா: ஆணவக் கொலை என்பது ரொம்ப காலமாகவே இருக்கிறது. தலித் சமுதாயத்திற்குள்ளேயும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பாமகவைப் பொறுத்தவரைக்கும், இளம் பெண்கள் கையகப்படுத்துவதையும் திட்டமிட்டு வலைப்பதையும் எதிர்க்கிறது. பெண்கள் இந்த சமுதாயத்தில் முக்கியமானவர்கள். அடுத்த தலைமுறையைக் கடத்துபவர்கள், ஆனால், அவர்கள் வெறும் போகப்பொருளாக இந்த ஆணாதிக்க சமூகம் பார்க்கிறது. பெண்களை எப்படி கையகப்படுத்தலாம் என்று திட்டமிட்டு தனக்கான பொருளாதார வசதிகளை மேம்படுத்திக்கொள்ளாலாம் என்று யோசிக்கிற இடத்தைத்தான் பாமக கண்டிக்கிறது. அந்த மாதிரி விஷயங்களைத்தான் பாமக கண்டிக்கிறது. சாதிய ரீதியான ஆணவக் கொலைக்கு, அது யாராக இருந்தாலும் பாமக ஒருநாளும் உடன்படுவதில்லை.
ஆனால், பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பெண்கள் அழிக்கப்படுகிறார்கள். பெண்கள் தொடர்ந்து இந்த சமுதாயத்தின் பண்டமாகப் பார்க்கப்படுகிறார்கள். சென்னையில் ஏறக்குறைய 3,000 திருமணங்கள் முழுக்க முழுக்க தவறான திருமணங்களாக நடந்தப்பட்டிருக்கிறது. அப்படியே சாட்சியங்களுடன் இருக்கிறது. பெண்ணே வராமல், ஒரு பெண் பெயரைச் சொல்லி பதிவுத் திருமணம் செய்து, அந்த வீட்டில் பெண்ணின் குடும்பத்தாரை மிரட்டுகிற போக்கு தொடர்ந்து இருந்திருக்கிறது. அவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. திரௌபதி படம் அதை நோக்கித்தானே நகர்ந்தது. இந்த விஷயத்தைத்தான் பாமக தொடர்து கண்டிக்கிறது. சிலர் உடனே என்ன நினைக்கிறார்கள் என்றால் பாமக தலித்துகளுக்கு எதிராக இருக்கிறார்கள். ஆணவக் கொலைக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்கிற பார்வையை பொதுப்புத்தியில் உருவாக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள்.
கேள்வி: ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவர பாமக குரல் கொடுக்குமா?
என்றைக்குமே நாம் கொலைக்கு எதிரான குரலை பதிவு செய்துதான் ஆக வேண்டும். பாமக கண்டிப்பாக குரல் கொடுக்கும். இதில் நுண்ணரசியல் நிறைய இருக்கிறது. பெண்களை கையகப்படுத்துகிற போக்கைத்தான் கண்டிக்கிறோமே ஒழிய, இந்த கொலைகளை ஒருநாளும் ஆதரிக்கிறது இல்லை.
கேள்வி: மற்றவர்கள் கையகப்படுத்துகிற அளவுக்கு பெண்கள் சுய சிந்தனை இல்லாதவர்களாக இருக்கிறார்களா? மற்றவர்கள் கையப்படுத்துகிற அளவுக்கு அவர்கள் பலவீனமாக இருக்கிறார்களா?
ஆன்லைன் ரம்மியைப் பற்றி பேசும்போது, படித்தவர்கள் எல்லாம் சுயசிந்தனை இல்லாமல் இருக்கிறார்களா என்ற கேள்வி வரும் இல்லையா? ஒரு ஆணை நோக்கி நாம் இப்படி கேள்வி எழுப்புவதில்லை. ‘கள்வன் பெருசா, காப்பான் பெருசா’ என்றால், காப்பான் போலீஸ் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் கள்வன் அதைவிட பெருசா இருக்கிறான் இல்லையா? பெண் புத்திசாலி இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அவள் உணர்வு ரீதியாக, அன்பின் நிமித்தம் கட்டுப்படுகிறாள். அவள் அன்புக்கு இணங்குகிறவள். அந்த இடத்தை அவன் பயன்படுத்துகிறான் என்பதால் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. அன்பாக இருப்பது பெண்ணின் இயல்பான குணம்.
கேள்வி: பெண்களைக் கையகப்படுத்துபவர்கள் குறிப்பாக யாராக இருக்கிறார்கள்?
திலகபாமா: என்னைக் கேட்டால், இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒட்டுமொத்தமாக இது எல்லா பகுதிகளிலும் வரத்தொடங்கிவிட்டது. இந்த அரசியலே இல்லாமல், நான் ஒரு கிராமத்தில், ஒரு அம்மாவிடம் கேட்கிறேன். அவர்கள் சொல்கிறார், ‘இரண்டு பெண்கள் இருக்கிற வீடாக படையெடுக்கிறாங்க’ என்று சொல்கிறார். இன்னொன்று, சினிமாவில் வரும் வசனங்கள், ‘பார்த்தால் புடிக்காது, பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும்…’ போன்ற வசனங்கள். தொடர்ச்சியாக ஒரு பெண் பின்னாடி சுற்றுகிறபோது, அவனை இறக்க குணத்தோடு ஒரு பெண் அணுக ஆரம்பித்தாலே, அவள் அந்த இடத்தில் சரிந்துவிடுகிறாள்.
கேள்வி: எல்லா பகுதிகளிலும் என்று சொல்கிறீர்கள். குறிப்பாக சொல்ல முடியுமா?
திலகபாமா: நான் இதை சாதி ரீதியாக கட்டம் கட்டத் தயாராக இல்லை. இன்றைக்கு தலித் சமுதாயத்திலும் இந்த மாதிரி கொலை நடப்பதற்கு காரணம், பெற்றவர்கள் ஏதோ ஒரு இடத்தில் கோபப்படுகிறார்கள். ‘எம் புள்ள காணாமல் போச்சே, புள்ள இல்லாம போச்சே, புள்ளய கையகப்படுத்திட்டானே” என்று வருத்தப்படுகிற இடம் வரும்போது, இந்த மாதிரியான கோபங்கள் வந்து சேர்ந்துவிடுகிறது.
கேள்வி: நமது அரசியலமைப்புச் சட்டம், 18 வயது நிரம்பிய பெண், தனக்கான துணையை தேர்வு செய்கிற எல்லா உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது என்று கூறுகிறது. அப்படி என்றால், இது குடும்ப அமைப்பில் இருக்கிற பிரச்னையா?
திலகபாமா: இல்லை, நான் என்ன கேட்கிறேன் என்றால், எப்போது இந்த சிக்கல் வருகிறது என்றால், சரியாக 17 வயது முடிகிற நாளில் ஒரு பெண் ஏன் காணாமல் போகிறாள், அப்போது ரொம்ப கவனமாகக் காத்திருந்து ஒருநாள்கூட விடாமல் அந்த பெண்ணை நகர்த்திக்கொண்டு போகிறார்கள் என்றால், அதை சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது. இதையே, ஒரு ஆணும் பெண்ணும் நம்முடைய வாழ்வியலைத் தகவமைப்பதற்கு ஏற்ற கல்வி, பொருளாதாரம் இதையெல்லாம் உருவாக்கிக்கொண்டு திருமணம் செய்ய திட்டமிடுகிறார்கள் என்றால், அதற்கு நாம் மரியாதைக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
கேள்வி: அதே நேரத்தில் பெற்றோர்கள் சம்மதத்துடன் குழந்தைத் திருமணங்களும் நடக்கிறது இல்லையா?
திலகபாமா: கண்டிப்பாக, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் 18 வயது நிரம்பாத பெண்கள் பிரசவத்துக்கு ‘அட்மிட்’ ஆகிறார்கள். 3வது, 4வது குழந்தை பிரசவத்துக்குகூட மேஜர் ஆகாத பெண்கள் ‘அட்மிட்’ ஆகிறார்கள். இதெல்லாமும்தான் பேச வேண்டும். நாம் பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. செய்ய வேண்டிய காரியங்களும் நிறைய இருக்கிறது.
கேள்வி: நீங்கள் பாமகவில் மாநிலப் பொருளாளராக முக்கியப் பொறுப்பில் இருக்கிறீர்கள். அரசியலுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் நீங்கள் ஏதாவது சாதித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா?
திலகபாமா: தொடர்ச்சியாக எல்லா இடங்களுக்கும் எல்லா கிராமங்களுக்கும் பயணம் செய்ய முடிகிறது. இதை நான் மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். ஏனென்றால், நான் அதுவரை எந்த சமூகம் குறித்தோ, சமூகத்தின் உளவியல் குறித்தோ நான் வைத்திருந்த முன் தீர்மானங்களை எல்லாம் அது அடித்து காலி செய்துவிட்டு இந்த கிராமங்களும் மக்களும் புதுசா ஒரு பாடம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் நான் சரியாக செயல்பட உதவும். பாமாகவின் பொருளாளர் பொறுப்பு எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. அடுத்தது மிகப்பெரிய வெற்றி என்றால், பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு ஒரு சின்ன தயக்கமும், இடம் அளிக்கப்படாமையும் இருக்கிறது. அது எந்தக் கட்சியாக இருந்தாலும்.
ஐயா எப்போதும் சொல்வார்கள், பெண்களுக்கு இடம் கொடுங்கள் என்று சொல்வார். ஆனால், அதைத் தாண்டி ஆண்கள் ஆதிக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மாற்றி அவர்கள் இயக்கத்துக்குள் வருவதற்கும், இயங்குவதற்கும், ஒரு பெண்ணுடைய அரசியல் பார்வை சமுதாயத்திற்கு முக்கியத் தேவை என்பதை செயல்படுத்துவதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.
கேள்வி: பெரும்பாலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிற இந்த அரசியல் உலகத்தில், அரசியலுக்கு பெண்கள் வருவதற்கான இடம் எப்படி இருக்கிறது, பாமகவில் எந்த அளவுக்கு பெண்களுக்கு இடம் தருகிறது? அதில் என்ன போதாமை இருக்கிறது?
திலகபாமா: முதலில் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வருகிறீர்களா என்று கேட்டபோது, நான் முதன் முதலில் கேட்ட கேள்வி, நான் சுதந்திர எண்ணம் உடையவள், யாருக்கும் கட்டுப்படமாட்டேன். அதனால், எனக்கு சரியாக வருமா என்று கேட்டபோது, ஐயா மருத்துவர் ராமதாஸ் சொன்ன வார்த்தை, ‘நீங்கள் கவிஞர், எழுத்தாளர் என்பதில் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. சுதந்திரமாக செயல்படுவதற்கான எல்லா உத்தரவாதத்தையும் நான் தருகிறேன். சுதந்திரமாக செயல்படுவதற்கு நாங்கள் ஒருநாளும் தடையாக இருக்கமாட்டோம்” என்றார். இன்றுவரைக்கும் அந்த வார்த்தை காப்பாற்றப்படுகிறது.
நான் மகளிர் மேடை என்று ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு ஒவ்வொரு மாவட்டம் தோறும் சென்றேன். இதை நான் செய்கிறேன் என்று ஐயா மருத்துவர் ராமதாஸிடம் தகவல்தான் சொன்னேன். அதற்கு ‘அவர் தாராளமாக செய்யுங்கமா… போய்ட்டு வாங்கமா’ என்றார்.
வைகை பாதுகாப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் வரவேண்டும் என்று அதற்காக ஒரு மாதம் பயன திட்டமிடல் எல்லாம் போட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். எந்த தயக்கமும் இல்லாமல் வந்தார்.
விகடனில் ஒரு நேர்காணல் கேட்கிறார்கள் என்றேன். அதற்கு ஐயா, ‘அதை நீங்கள் முக்கியம் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார். ஆமாம், ஐயா என்றேன். அப்படியானால், கண்டிப்பாக நேர்காணல் அளியுங்கள் என்றார்.
அதே போல, நான் சொல்கிற வார்த்தைக்கு மரியாதை இருக்கிறது என்கிறபோது எனக்கும் பொறுப்பு கூடுகிறது. நானும் எந்த வார்த்தையும் சொல்வதற்கு முன்னால், நூறுமுறை யோசிக்கிறவளாகிப் போயிருக்கிறேன்.
ஆணாதிக்கம் மிகுந்த ஒரு அரசியல் சூழலில், ஒரு பெண்ணாகப் பார்க்காமல் ஒரு படைப்பாளி, புதிய விஷயங்களை திட்டமிடுகிறவள் என்கிற அடிப்படையில் பார்ப்பது என்பது எனக்கு ஒரு பெரிய பலம். சாமானியர்களும் கட்சி நிர்வாகிகளும் ஆணாதிக்க மனோ நிலையில் இருந்தாலும், தலைமையின் பார்வை ஒரு விஷயத்தில் இப்படி இருக்கிறது என்றால், அவர்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். தலைமையின் இந்த பார்வையை நான் பெரிய பலமாக நினைக்கிறேன். ஆனால், இதுமாதிரி எல்லா இடத்திலும் வாய்க்குமா என்று எனக்குத் தெரியாது. எல்லாக் கட்சிகளிலும் இதைப்போல வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
திமுகவில் வெளியே கனிமொழி என்னவாக இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியும். அங்கே அவர்கள் நினைத்த விஷயத்தைச் செய்ய சாத்தியம் இருக்கா? அது முழுக்க ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கமாகத்தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
எனக்கு பொருளாளர் பொறுப்பு அளிப்பதற்காக ஐயா கட்சியின் சட்டவிதிகளையே திருத்தினார். இதெல்லாம் மிகப்பெரிய விஷயம்.
என்னை ஒரு பெண் ஆளுமை என்று நினைக்காமல் ஆளுமை என்று நினைத்து கட்சி நடத்திக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
கேள்வி: பாமகவில் டாக்டர் ராமதாஸை ஐயா என்றும் அன்புமணியை சின்ன ஐயா என்றும் அழைப்பதும், திமுகவில் இப்போது உதயநிதியை சின்னவர் என்று அழைப்பதும் ஜனநாயக அரசியலில், முடியாட்சியின் தொடர்ச்சியாகவும் நிலவுடைமை ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவும் இல்லையா?
திலகபாமா: எல்லா அரசியல் கட்சிகளிலும், ஜனநாயக ரீதியான கம்யூனிஸ்ட் கட்சியிலும் நீங்கள் யார் தலைவர் என முன்னிறுத்தி அவர்களை எல்லோரிடத்திலும் கொண்டுபோய் சேர்ப்பது, ஒற்றை முகமாக கொண்டுபோய் சேர்ப்பது மிக முக்கியமான விஷயம். ஒரு ‘கரிஷ்மா லீடரை’ உருவாக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தில், இவர்கள்தான் முக்கியமானவர்கள் என்று ‘ஹீரோ வொர்ஷிப்’ (நாயக வழிபாடு) செய்வதற்கு இந்த மாதிரியான வார்த்தைகள் மிக முக்கியமான பங்காற்றுகிறது என்று நான் நினைக்கிறேன்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸை பொறுத்தவரைக்கும் தொண்டர்கள் ‘அன்புமணி ராமதாஸ்’ வாழ்க என்று கோஷம் போட்டாலே, வேண்டாம், கட்சி வாழ்க என்று மட்டும் சொல்லுங்கள் என்று சொல்வார்.
தொண்டர்களுக்கு என் தலைவன் மிக முக்கியமானவன் என்கிற எண்ணமும், தலைவர்களுக்கு நான் தொண்டர்களில் ஒருவன் என்கிற எண்ணமும் சரியாக இருந்தால் அந்த வார்த்தைகளில் ஒன்றும் பிரச்னை இல்லை.
ஆனால், தொண்டர்கள் எல்லாம் தலைவரை சாமி ஆக்கிட்டார்கள், அவரும் தன்னை சாமியாக நினைத்துக்கொள்கிறார் என்றால் அங்கேதான் உங்களுக்கு பிரச்னை வரும். தலைவர்கள் தான் தொண்டர்களில் ஒருவனாகவும், தொண்டர்கள் தலைவனை இவர்தான் நமக்கு சாமி என்று நினைக்கிற இடம் தேவையாக இருக்கிறது. ஒரு 10 பேரை அழைத்து உட்கார வைப்பதற்குகூட உங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரு நம்பிக்கையை உருவாக்குவதற்கு, சில விஷயங்கள், சில ஆளுமையான விஷயங்கள், சில மந்திரச் சொற்கள் தேவைப்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க முடியாது.
எம்.ஜி.ஆர் காலத்தில் அப்படி எம்.ஜி.ஆர் என்ற வார்த்தை மாறிப்போனது. இப்போது ஐயா, சின்ன ஐயா என்ற வார்த்தைகள் தொடர்கிறது. இந்த பெயர்கள் எல்லாம் நாம் வைப்பதில்லை. சமூகம் வைக்கிறது. சமூகத்தில் நிற்கப்போகிற பெயர்கள். அவருடைய வீட்டில் வைத்த பெயர் ராமதாஸ்தான். ஆனால், சமூகம் வைத்த பெயர் ஐயா, அதை வந்து யாரும் நீ ‘ஐயா’ணு கூப்பிடாத என்று சொல்ல முடியாது.
கேள்வி: கடந்த 10 ஆண்டுகளில் வட தமிழகத்தில் தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் அவ்வப்போது உரசல் இருந்து கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உரசல்கள் விசிக – பாமக கூட்டணியில் இருந்தபோது குறைந்திருந்தது. இப்போது இந்த உரசல்களைத் தீர்க்க பாமக தரப்பில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க திட்டமிருக்கிறதா?
திலகபாமா: தலித்துகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, எப்படி அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோமோ, அது சமுதாயத்துக்கு ஒன்றாகவும் மாறிப்போகும். இந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப ‘சென்சிட்டிவ்’ ஆனது. அதை சொல்ல முடியாது. சொல்லாமல் செயல்படுத்துவது என்று பாமக இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருகிறது.
ஒரு பகுதியில் பெரும்பான்மை சமூகமாக தலித் சமூகமாக இருந்தால் அந்த இடத்தில் கட்சியிலும் நிர்வாகப் பொறுப்புகளிலும் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அந்த பகுதிகளில் எந்த சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கிறதோ அவர்களுக்கு கட்சியில் அங்கே அந்த சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதே போல, எல்லா சமுதாயத்திற்கு கட்சிக்குள் பிரதிநிதித்துவம் உள்ளது. இது கட்சியின் கட்டமைப்பின் முக்கிய விதி. இதைவிட நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு வேறு என்ன செய்ய முடியும்?
ஆனாலும், இன்னும் சிலர் இந்த பிரிவினைவாதத்தோடு இருக்கிற வைரக்கும்தான் நாம் அரசியல் செய்ய முடியும் என்று பல பேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக திராவிடக் கட்சிகள் எல்லோரும் அதைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாங்கள் சாதி அடிப்படையில் பார்க்கவில்லை என்று சொன்னாலும் சாதிய ரீதியான மோதல்களை உருவாக்கித்தான் அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பி.ஜே.பி-யைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் மத அடிப்படையில் இல்லை என்று சொன்னாலும் மத ரீதியான, மோதல்களை உருவாக்கித்தான் அந்த இடங்களில் அவர்கள் வலுவாகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர்கள் வலுவாகிறார்கள் என்றால், மத ரீதியான மோதல்கள் இருக்கிற அந்த இடத்தில் அவர்கள் வலுவாகிவிடுகிறார்கள். அப்போது மோதல்கள் யாரால் உருவாக்கப்படுகிறது என்கிற கேள்வி இருக்கிறது. ஆனால், பாமகவைப் பொறுத்தவரைக்கும் சாதியோ, மதமோ அவரவர்களுக்கானது. அதை அடிப்படையில் ஒன்று சேர பயன்படுத்தலாமே ஒழிய, பிரிவினைவாதம் செய்வதோ, அதில் அரசியல் நிகழ்த்துவதோ கிடையாது. கட்சி தலைமையில் வலுவான கொள்கை வைத்திருக்கிறார்கள்.
கேள்வி: நீங்களே பாஜக மத மோதல்களை உருவாக்குவதாகக் கூறுகிறீர்கள். ஆனாலும், பாமக பாஜகவுக்கு ஆதரவு அளித்துகொண்டுதானே இருக்கிறது?
திலகபாமா: பாஜகவோ, அதிமுகவோ எல்லாமே தேர்தலுக்கான கூட்டணிகள். ஆனால், அதிலும்கூட சரியாக இல்லாத விஷயத்தில் எதிர்த்துக் குரல் கொடுக்க பாமக தயங்கியதில்லை. என்ன கூட்டணி கட்சிகளே விமர்சிக்கிறீர்கள் என்றால், சரியாக இல்லை என்றால் விமர்சிக்கிறோம். சரியாக இருந்தால், எதிர்க்கட்சியில் இருந்தாலும் பாராட்டுகிறோம்.
ஐயா மிகவும் வெளிப்படையாக இருப்பார். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறது என்றால், ஆமாம் மணக்கிறது என்று சொல்லிவிட்டு போய்விடுவார்.
கேள்வி: அண்மையில், விசிக தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ, பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே. மணி நட்புடன் சந்தித்து பேசுவது போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இது பாமக – விசிக சுமூக உறவை நீட்டிப்பதற்கான சமிக்ஞையா?
திலகபாமா: எல்லாக் கட்டத்திலும் எல்லோருடனும் சுமூகமான உறவை வைத்துக்கொள்வதற்குத்தான் பாமக விரும்புகிறது. விசிகவுடன் அல்லது விசிக தலைவர்களுடன் எந்தவிதமான எதிர்ப்பு அரசியலும் வெறுப்பு அரசியலும் எங்களிடம் இல்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் சில கொள்கைகளில், கருத்தியல்களில் மாறுபாடு இருக்கிறது என்றால் அதைக் கண்டிக்கிறோம். தனிமனித எதிர்ப்பு ஒருநாளும் இருப்பதில்லை. திருமாவளவனை நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கான தலைவராக வர வேண்டும் என்று சொன்னவரே மருத்துவர் ஐயாதான். இம்மானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அந்தக் காலத்தில் 15 லட்சம் ரூபாய் அளித்தவர் மருத்துவர் ஐயாதான். ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலை வைத்ததை வேறு எந்த இயக்கமும் செய்யவில்லையே. ஆனால், தலித் சமுதாயமும் வன்னிய சமுதாயமும் ஒன்றிணைந்தால், சிலரின் அரசியல் மாயையாகிவிடும் என்று சில கட்சிகள் நன்றாக திட்டமிடுகிறார்கள். அவர்கள், அந்த பிரிவினைவாதத்தை வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா தலைவர்களின் சிலைகளும் இரும்பு கூண்டுக்குள்தான் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த கூண்டுகளை அகற்ற பாமக அழுத்தம் கொடுக்குமா?
திலகபாமா: சிலைகளை கூண்டுகளில் வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் மண்ணில் பிறந்த தலைவராக இருந்தாலும் கூண்டில் வைத்துதான் பாதுகாப்பாக வைக்கிறீர்கள். ஆனால், வெளிநாட்டினர், பிரிட்டிஷ்காரர் சிலைகள் எல்லாம் அப்படியே பாதுகாப்பாக இருக்கிறது என்றால், மக்களின் மனநிலையை மாற்றி அமைக்க வேண்டிய கடமை எல்லாருக்கும் இருக்கிறது.
பாமகவில் குருவுக்கு எல்லா இடத்திலும் சிலை வைக்க வேண்டும் என்றபோது நீங்கள் சிலை வைத்துவிட்டு அதை வைத்து அரசியல் செய்வீர்கள் என்று ஒரு இடத்தில் சிலை வைத்து வழிபாடு செய்வோம் என்று ஒரே பேச்சில் முடித்துவிட்டார் ஐயா.
அதே நேரத்தில், கூண்டுகளை அகற்ற பாமக அழுத்தம் கொடுக்க முடியாது. ஏனென்றால், அந்த கூண்டை அகற்றிய உடனே அந்த சிலையை உடைத்து அரசியல் செய்வதற்கு சிலர் தயாராக இருக்கிறார்கள். அந்த மனநிலை மாறாமல் கூண்டுகளை அகற்ற போராட்டங்களை முன்னெடுக்க முடியாது.
கேள்வி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் போய்க்கொண்டிருக்கிறது. இதை ஒரு கூட்டணி கட்சித் தலைவராக எப்படி பார்க்கிறீர்கள்?
திலகபாமா: என்னைப் பொறுத்தவரைக்கும் அதிமுக அழிவை நோக்கி செல்கிறது. எப்போது ஒருவர் தன் முனைப்பாக கட்சியில் செயல்படத் தொடங்குகிறார்களோ, அப்போதே கட்சி அழிவை நோக்கி நகர்ந்துவிடும். அதுதான் இப்போது அங்கே நடந்துகொண்டிருக்கிறது. அதில் ஒருத்தரை மற்றும் குற்றம்சாட்ட முடியவில்லை. ஒவ்வொருத்தரும் தன்னை முன்னிலைப் படுத்துவதற்கான பிரயெத்தனம் என்பது கட்சியை அழித்துவிடும். நான் பாமகவில் இருக்கிறேன் என்றால் மருத்துவர் அன்புமணி என்கிற ஒற்றை முகத்தைத்தான் கொண்டுபோய் சேர்க்க விரும்புகிறேன். அதில் திலகபாமா முகம் காணாமல்தான் போகும். அதற்கு நான் தயாராக இருக்க வேண்டும். அதற்கு தயாராக இருந்தால் மட்டும்தான் நீங்கள் இயக்கப் பணி ஆற்ற முடியும். ஒவ்வொருத்தரும் தனித்தனியா யோசித்தோம் என்றால், அது சிதறிவிடும். இன்றைக்கு அதிமுக அதை நோக்கி பயனப்படுகிறது. இருக்கிற ஆளுமையான தலைவர்கள் அதைப்பற்றி சிந்தித்தார்கள் என்றால் நல்லது. இல்லையென்றால் அதிமுக களத்தில் இல்லாமல் போய்விடும்.
இன்றைக்கு அதிமுகவில் பலரும் நான் தலைமைக்கு வர முடியுமா என்ற கேள்வியில் நிற்கிறார்கள். அதுதான் பிரச்னை. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மட்டுமல்லாமல், அதிமுகவில் முக்கியமான 10-15 தலைகள் நாங்கள், நாங்கள் என்று சிந்திக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கக்கூடாதா? என்று நினைக்கிறார்கள். அதுதான், பல விஷயங்களை, பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
கேள்வி: அதிமுகவின் அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் பாஜகவின் செல்வாக்கு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து ஊடகங்களில் அரசியல் விவாதங்களில் வைக்கப்படுகிறது. அதைப் பாமக எப்படி பார்க்கிறது?
திலகபாமா: அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய், அடுத்த கட்சியை அழித்து நின்றுகொள்ளலாம் என்ற போக்கு உருவாகி இருக்கிறது. இந்த போக்கு பாஜகவிலும் இருக்கிறது. திமுகவிலும் இருக்கிறது. இது சமுதாயத்திற்கு தலைமுறைக்கு நல்ல எண்ணங்களைக் கொண்டு வந்து சேர்க்காது. இன்னொரு கட்சியை அழித்து நாம் நின்றுவிடலாம் என்று பாமக ஒருநாளும் யோசித்ததில்லை. நாம் மக்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், திமுகவிலும் சரி, பாஜகவிலும் சரி, எப்போது ஏஜென்ஸியை வைத்து கட்சி நடத்தத் தொடங்கினார்களோ அப்போதே அவர்கள், அடுத்தவர்களை அழித்து அவர்கள் கட்சியை நிலை நிறுத்துவது என்ற நிலை உருவாகிவிட்டது. அது ஆபத்து.
கேள்வி: காங்கிரஸ் பாஜகவுக்கு இன்னும் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்த முடியவில்லை; பாஜக பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
திலகபாமா: காங்கிரஸ் எங்கே இருக்கிறது. எந்த இயக்கமும் மோனோபோலியா உருவாவது நாட்டுக்கு நல்லது இல்லை. அதைநோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது. அது ஆபத்துதான்.
கேள்வி: காங்கிரஸ் தன்னை எப்படி சரிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
திலகபாமா: காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை அடுத்து திமுகவுக்கு வரும். இயக்கத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்காமல், ஜனநாயகரீதியாக கொண்டு செல்வது, என்பது எப்போது சாத்தியம் இருக்கிறதோ, அப்போதுதான் இயக்கம் தொடர்ந்து இருக்கும். அடுத்தடுத்து இளைஞர்கள் வந்து அந்த இயக்கத்துக்கு இரத்தம் பாய்ச்சிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது இளமையாக இருக்கும். இல்லையென்றால், மூப்படைந்து காணாமல் போய்விடும். ஏறக்குறை காங்கிரஸ் அந்த நிலைமைக்கு வந்திருக்கிறது.
பாஜகவின் பலம் என்னவென்றால், அதில் அடுத்தடுத்த தலைவர்கள் யார் யாரோ வருகிறார்கள். ஜனநாயக ரீதியாக உள்ளே வரும்போது, அது திரும்ப இளம் ரத்தமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இதை எல்லா இயக்கங்களும் கையில் எடுக்க யோசிக்க வேண்டும். இதற்கு எல்லா இயக்கமும் துணிந்து வருமா என்ற அச்சமும் இருக்கிறது.
கேள்வி: பாமகவிலும் அதே நிலைதானே இருகிறது?
திலகபாமா: நீங்கள் அடுத்து இந்த கேள்வியைத்தான் கேட்பீர்கள் என்று தெரியும். பாமக இதுவரைக்கும் தலைவர் பொறுப்பை வாரிசுகளுக்கு தந்ததில்லை. இன்றைக்கு வழங்கியிருக்கிறது என்றால் அதற்கான ஆளுமையுடன் ஒருவர் இருக்கும்போது வழங்கியிருக்கிறார்கள். உதயநிதி போல, சும்மா சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்து சேரவில்லை. 25 ஆண்டு கால உழைப்புக்கு பிறகுதான் அவர் அரசியல் பொறுப்புக்கு வருகிறார். வாரிசுதான் தலைவர் என்றால், அவர் 35 வயதில் மத்திய அமைச்சராக இருந்தபோதே தலைவர் பொறுப்பு கொடுத்திருப்பார்களே. அப்படி கொடுக்கவில்லை இல்லையா? அவர் தன்னை நிரூபிக்க 25 வருடம் எடுத்துக்கொண்டுள்ளார். அதற்கு பிறகுதான், தலைமைப் பொறுப்பு அவருடைய கைக்கு போகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”