தரவுகளை ஆராயும்போது பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு இலங்கைக்குள் விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2018, 2019 வருடங்களக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் கௌரவ சரித ஹேரத் தலைமையில் நேற்று முன்தினம் (06) கூடியபோதே அவர் தனது தனிப்பட்ட கருத்தை முன்வைத்தார்.
எரிபொருள் கொள்வனவின் போது அவற்றின் இறக்குமதிக்கான செலவு மற்றும் அரசாங்கம் அறவிடும் வரித் தொகை தொடர்பான புள்ளிவிபரங்களை சரியான முறையில் ஆராயும்போது இது தொடர்பான விபரங்கள் தெரியவருவதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். இதற்கமைய பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை தற்போதைய விலையைவிட 200 ரூபா குறைவாக விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். எனவே, ஏறத்தாழ 250 ரூபாவிற்கு பெற்றோல் மற்றும் டீசலை இந்நாட்டுக்குள் விற்பனை செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஜூலை முதலாம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் ஒரு லீட்டருக்கு 280 ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிட்டிருப்பதாகவும் கூறினார்.
இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர் தான் இந்தக் கருத்தை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அறிந்துள்ளனரா என கோப் குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். எனினும், தாம் இது பற்றி அறிந்திருக்கவில்லையென பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் பதிலளித்தனர். அதேநேரம், நிதி அமைச்சுக்கும் இதுபற்றி உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லையென்றும் இங்கு தெரியவந்தது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு அவருக்குக் காணப்படும் தகுதிகள் குறித்தும் கோப் குழுவின் உறுப்பினர்கள் ரத்னாயக்கவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். கல்வித் தகைமையாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அரசாங்க நிர்வாகம் குறித்த விசேட பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் காணப்படுவதாக அவர் பதிலளித்தார். மேலும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் கற்றிருப்பதாகவும் கூறினார். அதேநேரம், தனது அரசியல் தகுதியாக 2005ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்கள் அமைப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு விசேடமாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் ரத்னாயக்க தனது பதிலில் குறிப்பிட்டார்.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் கூறிய இந்தக் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும், இது நாட்டின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்திவலு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை அழைத்து எதிர்காலத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் 2021 டிசம்பர் 07ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளாமல் 2005ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பென்ஸ் ரக வாகனத்தை ஜெனரல் பிஸ்னஸ் (தனியார்) நிறுவனம் என்ற நிறுவனத்திடமிருந்து எரிபொருள் அல்லது சாரதி இன்றி மாதாந்த வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய இந்த வாகனத்துக்காக வருடாந்த வாடகையாக 4,500,000 ரூபாவாக அமைந்திருப்பதுடன், 2022 மே 31ஆம் திகதி குறித்த நிறுவனத்துக்கு 2,187,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த வாகனத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பான ஆவணங்கள் கணக்காய்வுக்காக வழங்கப்படாமை, 15 வருடங்கள் பழமையான வாகனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பணிப்புரை வழங்கப்பட்டமை, இதனைப் பெறுவதற்கான விலைமனுக் கோரலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை, இந்த வாகனத்துக்கான வாடகைப் பணம் செலுத்தும்போதான வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்தும் கோப் குழுவில் வினவப்பட்டன. குறிப்பாக, இந்த நிறுவனத்திற்குப் பணம் வழங்குவதற்கான ஒப்புதலில் கையெழுத்திடும் அதிகாரி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோப் குழு அறிவுறுத்தியது.
இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன அமைப்பு மற்றும் சம்பளக் கட்டமைப்பு என்பன தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், நிதி அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்குத் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவை அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனுமதி பெறப்படாது சில செயற்பாடுகளுக்கு செலவு செய்யப்பட்டமை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
விசேடமாக, நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 11 வகைான கொடுப்பனவுகளின் கீழ் 45,873,483 ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன், மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளுக்காக முழுமையான நடவடிக்கைக்கான தொகையான 86,808,538 ரூபாவில் அதாவது, மொத்தத் தொகையில் 49 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.
மேலும், மின்சாரத் துறையில் வினைத்திறன், அவசியம், கேள்விக்கான மாற்றங்கள் போன்றவற்றைக் கண்காணித்து அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை மின்சார சபை நாளாந்தம் வழங்க வேண்டிய விநியோகச் சுருக்கம், உண்மையான விநியோகம் மற்றும் தினசரி விநியோக அட்டவணை 2018 மே மாதம் முதல் 2019 டிசம்பர் மாதம் வரை ஆணைக்குழுவுக்கு வழங்கப்படாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2018-2037ஆம் ஆண்டுக்கான மின்சார உற்பத்தித் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், 2021ஆம் ஆண்டு மற்றுமொரு புதிய மின் உற்பத்தித் திட்டத்தின் தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது உரிய தேவைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அரசியல் அதிகாரம் மாற்றமடையும்போது இத்திட்டங்களும் மாற்றப்படுவதாலேயே பிரச்சினைகள் ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோப் குழு வலியுறுத்தியது.
மேலும், 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்சாரம் (விநியோகம்) செயல்திறன் தரநிலை ஒழுங்கு விதிகளின் கீழ், செயல்திறன் விதிகளைத் தயாரித்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் 36 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டிய பணிகள் ஏறத்தாழ 4 ஆண்டுகள் கடந்தும், 2018ல் முடிக்க திட்டமிடப்பட்ட கூட்டிணைத்தல் கட்டம் கூட இதுவரை பூர்த்திசெய்யப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியது. இதனை 3 வருடங்களில் 3 கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாகவும், முறைமையை மாற்ற வேண்டிய தேவையாலும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளாலும் இதுவரை அது நடைபெறவில்லை எனவும் வருகை தந்திருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இக்கூட்டத்தில், அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.