ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பிரச்சாரத்தின் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜப்பான் மேலவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், நாரா என்ற நகரில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஷின்சோ அபேவுக்கு பின்னால் நின்றிருந்த நபர், 3 மீட்டர் தூரத்தில் வைத்து, 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் அபேவின் நெஞ்சு பகுதியிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. ஜப்பான் நேரப்படி காலை 11.30 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்ற நிலையில், ஷின்சோ அபே சுயநினைவு இழந்து கிழே விழுந்தார்.
உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நாரா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 67 வயதான அவரின் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்துவிட்டதாக, முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், திடீரென மாரடைப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயிர்க்காக்கும் சிகிச்சை அளித்தும் ஷின்சோ அபேவின் உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஷின்சோ அபேவை சுட்ட யமாகாமி டெட்சுயா என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் வரலாற்றில் நீண்டகாலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை ஷின்சோ அபே பெற்றிருந்தார். முதலில் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 2012 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்த அபே, உடல் நலக்குறைவினால் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.