தொழுப்பேடு அருகே முன்னால் சென்ற லாரியின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி

தொழுப்பேடு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே அரசுப் பேருந்து ஒன்று முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அரசுப் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, இரும்புக் கம்பி ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரியின் மீது இடதுபக்கமாக பேருந்து அதிபயங்கரமாக மோதியது. இதில், பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும், 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இறந்தவர்களின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணிகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

விபத்தினால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்தை அகற்றியபின் வாகன போக்குவரத்து நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.