அனைத்து நேபாள பிக்குகள் சங்கம் மற்றும் அனைத்து நேபாள பிக்குகள் சங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘இலங்கைக்கான கரங்கள்’ குழு, திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக நேபாள ரூபாய் 25 லட்சம் பெறுமதியிலான அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் நன்கொடையை 2022 ஜூலை 04ஆந் திகதி இலங்கைத் தூதரகத்திடம் கையளித்தது.
இந்தக் கையளிக்கும் நிகழ்வில் நேபாளத்தின் பிரதம சங்கநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய போதிசேன மகா தேரர் மற்றும் அனைத்து நேபாள பிக்கு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் துறவிகள், அதன் தலைவர் வணக்கத்திற்குரிய தம்ம சோபன தேரர் உட்பட அனைத்து நேபாள பிக்குகள் சங்க குழு உறுப்பினர்கள், திட்டத்தின் இணைப்பாளர் வணக்கத்திற்குரிய பன்னாசார தேரர் மற்றும் ‘இலங்கைக்கான கரங்கள்’ குழுவின் பொதுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முதல் பங்களிப்பை வழங்கிய பிரதம சங்க நாயக்க தேரர், இலங்கை மக்களுக்குத் தேவையான இவ்வேளையில் உதவுவதற்காக அனைத்து நேபாள பிக்குகள் சங்கம் ‘இலங்கைக்கான கரங்கள்’ திட்டத்தை முன்னெடுப்பதற்கு வழிவகுத்த இரு நாடுகளுக்கிடையிலான வலுவான மத பந்தத்தை எடுத்துரைத்தார். நேபாளத்தில் தேரவாத பௌத்தத்திற்கு இலங்கையின் பங்களிப்பையும், பல ஆண்டுகளாக இலங்கையில் கல்வி கற்ற துறவிகளின் எண்ணிக்கையையும் அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார். அனைத்து நேபாள பிக்குகள் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய தம்ம சோபன தேரர் மேலும் உரையாற்றுகையில், 2015ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் பின்னர் இலங்கையிடமிருந்து பெறப்பட்ட உதவிகள் உட்பட இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான பரஸ்பர மனிதாபிமான உதவிகளின் நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.
நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலகா இந்த திட்டத்திற்கு தாராளமாக பங்களித்த நேபாள மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அனைத்து நேபாள பிக்குகள் சங்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்காக ‘இலங்கைக்கான கரங்கள்’ அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தூதுவர் நன்றி தெரிவித்தார்.
இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் ஆசிகளை வேண்டி மகா சங்கத்தின் வணக்கத்திற்குரிய உறுப்பினர்களின் சேத்பிரித் ஓதியதுடன் நிகழ்வு நிறைவுற்றது.
அனைத்து நேபாள பிக்குகள் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட ‘இலங்கைக்கான கரங்கள்’ குழுவானது, அனைத்து நேபாள பிக்கு சங்க உறுப்பினர்கள் மற்றும் நேபாள இளைஞர்கள் பௌத்த சங்கம், தர்மோதயா சபா, யுபா பௌத்த சமுஹைன் பக்தபூர், நேபாளத்தின் பெண்கள் பௌத்த சங்கம் மற்றும் காத்மாண்டுவில் உள்ள யுபா பௌத்த சமுஹா ஆகியவற்றின் சாதாரண பிரதிநிதிகளை உள்ளடக்கியது.
நேபாளத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருந்துகளின் இரண்டாவது பொதியான இது, ஜூன் மாத தொடக்கத்தில் ஏசியன் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் வழங்கிய நன்கொடையாகும். மருந்துப் பொருட்களை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தூதரகத்திற்கு உதவியது.
இலங்கைத் தூதரகம்,
காத்மாண்டு
2022 ஜூலை 07