வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : இந்தியாவில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, 62 ஆயிரத்து 476 கோடி ரூபாய் விற்பனையை மறைத்து, அதை சீனாவுக்குஅனுப்பியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த, ‘மொபைல்போன்’ தயாரிப்பு நிறுவனமான வைவோ, நம் நாட்டில், வைவோ இந்தியா என்ற பெயரில் பதிவு செய்து செயல்படுகின்றது.சீனாவை சேர்ந்த நான்கு நபர்கள், நம் நாட்டில், 23நிறுவனங்களை உருவாக்கி பல மோசடிகளில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. அதனடிப்படையில், வைவோ இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான, 48 அலுவலகங்களில் சமீபத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவைச் சேர்ந்த நான்கு பேர், இந்தியாவில், 23 நிறுவனங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டது. இதில், மூன்று சீனர்கள், 2018 – 2021 காலகட்டத்தில் சீனாவுக்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு, டில்லியைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற ஆடிட்டர் உதவியுள்ளார். இந்த, 23 நிறுவனங்கள் வாயிலாக, வைவோ இந்தியா நிறுவனத்துக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வைவோ இந்தியா நிறுவனம், 1.25 லட்சம் கோடி ரூபாய் மொத்த வருவாயில், கிட்டத்தட்ட 50 சதவீதம், அதாவது, 62 ஆயிரத்து 476 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில், ஏற்கனவே உருவாக்கப்பட்ட, 23 துணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி மோசடி செய்துள்ளது. அதே நேரத்தில், இந்த பணம், சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, சோதனையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement