பக்ரீத் | புகழ்பெற்ற மோர்பாளையம் சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை 

நாமக்கல்: புகழ்பெற்ற மோர்பாளையம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகள் வியாபாரம் களைகட்டியதை அடுத்து இங்கு ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடு, மாடு, எருமை கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்கவும் விற்கவும் விவசாயிகளும் வியாபாரிகளும் வருவது வழக்கம். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாளே உள்ள நிலையில் வியாபாரிகளும் இஸ்லாமியர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்க மோர்பாளையம் சந்தையில் குவிந்தனர்.

நாட்டு வெள்ளாடு, ஜமுனா வெள்ளாடு, முணா வெள்ளாட்டு வகைகளும், நாட்டு செம்மறியாடு, துவரம் செம்மறி போன்ற ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் செம்மறி ஆடுகளே அதிகம் விற்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது. இந்த ஆடுகளை வாங்க சேலம், நாமக்கல் பள்ளப்பட்டி, புதுக்கோட்டை, கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர்களும் வியாபாரிகளும் வந்து வாங்கி சென்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை வியாபாரி மணிமுத்து கூறும்போது, ”பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இங்கு விற்பனைக்கு வந்துள்ளன. மோர் பாளையம் சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் வந்துள்ளனர்.

வழக்கமாக ஒரு கோடி ரூபாய் வரை இங்கு வியாபாரம் நடக்கும் பக்ரீத் பண்டிகை வருவதால் இன்று 2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளது. வழக்கத்தை விட விலையும் கூட்டமும் அதிகமாக உள்ளது” என்றார்.

வியாபாரி சந்தோஷ் குமார் கூறுகையில், ”மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் முன்னிட்டு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதை வாங்குவதற்காக பலரும் தேனி புதுக்கோட்டை கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். 10,000 ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்கப்படுகிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 2 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு விற்பனை நடைபெற்றுள்ளது,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.