வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: திபெத்திய மத தலைவர் தலாய் லாமாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தலாய் லாமா இந்தியாவின் விருந்தாளி எனக்கூறியுள்ளது.
புத்த மத தலைவர் தலாய் லாமா, கடந்த 6 ம் தேதி 87 வது பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதனை அறிக்கையில் தெரிவித்திருந்த மோடி, அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி கொள்வதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டும் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது: சீனாவிற்கு எதிரான மற்றும் பிரவினை எண்ணம் கொண்ட 14 வது தலாய் லாமாவை இந்தியா புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். திபெத் தொடர்பான விவகாரங்களில் சீனாவிற்கு அளித்துள்ள உறுதிமொழிகளுக்கு கட்டுப்பட்டு விவேகத்துடன் நடப்பதுடன், பேசவும், செயல்பட வேண்டும். திபெத் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் உள்பிரச்னைகளில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். திபெத் தொடர்பான சீனாவின் உள்விவகாரங்களில் எந்த வெளிநபரின் தலையீடும்இல்லை. தலாய்லாமா மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் இடையிலான தொடர்பை அனைத்து வகைகளிலும் சீனா எதிர்க்கும் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ”தலாய் லாமாவை, இந்தியாவில் கவுரவ விருந்தினராகவும், அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மரியாதைக்குரிய தலைவராக கருதுவது, இந்திய அரசின் நிலையாய கொள்கையாகும். அவரது பிறந்த நாளை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஏராளமானோர் கொண்டாடுகின்றனர். தலாய்லாமாவிற்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததை இந்த சூழலில் பார்க்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement