திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி எர்ணாகுளம் விசாரண நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். இந்த நிலையில் பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாக பாலச்சந்திர குமார் என்பவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மெமரி கார்டை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி குற்றப்பிரிவு போலீசாரும் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். போலீசின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மெமரி கார்டை மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பவும், 7 நாளில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து மெமரி கார்டு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.