அரியாங்குப்பம்:புதுச்சேரி அரியாங்குப்பத்தில், மனைவி மற்றும் இரு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று, ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு, கடன் தொல்லை காரணம் என, தெரியவந்துள்ளது.
புதுச்சேரி, பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன், 37; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பச்சைவாழி, 34. குழந்தைகள் லட்சுமிதேவி, 7; ஆகாஷ், 3. லட்சுமிதேவி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தியாகராஜன் பல லட்சம் ரூபாய் கடன் தொல்லையால் தவித்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், விரக்தி அடைந்தார்.
கடன் கொடுத்த ஒருவர், ஒரு வாரத்திற்கு முன் தியாகராஜனின் ஆட்டோவை எடுத்து சென்றார். இதனால், வருவாய்க்கு வழியில்லாமல், மன உளைச்சலில் இருந்தார்.நேற்று காலை, 9:30 மணிக்கு, தன் மனைவி பச்சைவாழியை துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின், இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் துணியால் நெரித்து கொலை செய்தார்.பின், அவரது நண்பரான ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு, ‘நாங்கள் குடும்பத்துடன் சாகப் போகிறோம்’ என, மொபைல் போனில் தகவல் கொடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில், அவரும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தியாகராஜன், மனைவி மற்றும் இரு குழந்தைகள் இறந்து கிடந்தனர்.அரியாங்குப்பம் போலீசார், நால்வரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆட்டோ டிரைவருக்கு கடன் கொடுத்தவர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement