இன்றும் நாளையும் நாட்டில் பல போராட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தின் மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கலவரங்கள் ஏற்படலாம் என்று கருதி கொழும்பு நகர் உள்ளிட்ட தலைநகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு
இந்தநிலையில் நாளைய தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை தனியார் மருத்துவர்கள் சிகிச்சையில் ஈடுபடுவதை தவிர்க்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், விபத்துக்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ அவசரநிலைகள் மற்றும் தனியார் துறையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்கள் போன்ற சேவைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பதற்காக நாடளாவிய அமைதியான எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவ நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவத் துறை முடங்கும் அபாயம்
அதேவேளை தனியார் மருத்துவ சேவையை நாடும் பொதுமக்களுக்கு தமது நடவடிக்கைகளால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, மருந்துப் பற்றாக்குறை மற்றும் இலங்கையை விட்டு வைத்தியர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக மருத்துவத் துறை கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறான தீர்மானங்களால் மருத்துவத் துறை முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.