மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட, 27 பேர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர், இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்ற 27 பேரில் 18 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் வெவ்வேறு மொழிகளில் – ஹிந்தி (12 உறுப்பினர்கள்), ஆங்கிலம் (4), சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி மற்றும் ஒரியாவில் தலா இருவர் மற்றும் பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா ஒருவர் பதவியேற்றனர்.
இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட உறுப்பினர்களில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் அடங்குவர். பியூஷ் கோயல் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும், நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், விவேக் கே தன்கா, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் பதவியேற்றனர். அதிமுகவை சேர்ந்த ஆர்.தர்மர் இன்று பதவியேற்றுக் கொண்டார். மொத்தம் 57 உறுப்பினர்களில் 14 பேர் மீண்டும் இரண்டாவது முறையாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று பதவியேற்காத எஞ்சிய எம்.பி.க்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்க உள்ளனர். மாநிலங்களவையில் உள்ள 72 உறுப்பினர்கள், ஜூலை மாதத்திற்குள் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.