இலங்கை செல்ல வேண்டாம்: பிரிட்டன், நியூசி., அறிவிப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண சூழலில், அந்நாட்டிற்கு அவசியமின்றி செல்வதை தவிர்க்கும்படி பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து நாடுகள் தங்கள் நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளன.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் மருந்து, சமையல் ‘காஸ்’ மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினசரி மின்வெட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில், இலங்கைக்கு அவசியமின்றி செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பிரிட்டன் இதுபோன்ற ஒரு அறிக்கையை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதனால், ‘சுற்றுலா பயணியர் வருகை பாதிக்கப்படும்’ என, இலங்கை கேட்டுக் கொண்டதால், மே மாதம் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. பசிபிக் கடல் பகுதியில் உள்ள நியூசிலாந்து நாடும், அவசியமின்றி இலங்கைக்கு செல்வதை தவிர்க்கும்படி தன் நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
‘அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால் அந்நாட்டுக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம்’ என, நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இலங்கை பயணத்தை தவிர்க்கும்படி அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.இலங்கையின் முக்கியமான சுற்றுலா வருவாய், கொரோனாவால் தடைபட்டது. அத்துடன் அரசின் தவறான கொள்கைகளும் அன்னியச் செலாவணி பற்றாக்குறைக்கு வழி வகுத்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க இயலாமலும் இலங்கை திணறி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.