அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று இரண்டாவது நாளாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை என்றும், வரைவு நிகழ்ச்சி நிரலுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியானாலும் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது.
அதிமுக பொதுக்குழுவை நடத்த உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று, ஈபிஎஸ் தரப்பு தங்களது வாதங்களை முன்வைத்தது.
மேலும், பிரச்சனைகள் குறித்து ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் தான் விவாதித்து இருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு அவர் வந்திருக்கக் கூடாது. 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற கோரிக்கை ஓபிஎஸ் மனுவிலேயே இல்லை.
தீர்மானம் கொண்டு வரவும், நிறைவேற்றவும் பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் உள்ளது. எந்த பிரச்சனை குறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்க உரிமை உள்ளது.
அதனை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது. ஓபிஎஸ் வழக்கு கட்சியின் நலனுக்கான வழக்கே இல்லை. தனிநபர் தேவைக்கான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இதனை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இடைத்தள மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், “பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன் வைத்த வாதம் தவறு. தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும். கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை.
சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்ட வேண்டும்” ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.