தெலங்கானாவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், மகபூப்நகரில் பெய்த கன மழை காரணமாக வெள்ள நீர் சாலைகளை சூழ்ந்தது. மகபூப்நகரின் முக்கிய சுரங்கபாதையிலும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது. அதனால் வாகனங்கள் அதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் அந்த சுரங்கப்பாதையில் சிக்கியது. பேருந்து பாதி நீரில் மூழ்கி நின்றதையடுத்து, உள்ளேயிருந்த பள்ளிக் குழந்தைகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டிருக்கின்றனர். அதையடுத்து, சத்தம் கேட்டு சுரங்கப்பாதைக்கு விரைந்த அக்கம், பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு பேருந்திலிருந்து மாணவர்களை மீட்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மகபூப்நகர் துணை போலீஸ் கமிஷனர், “இந்தச் சம்பவம் காலை 9 மணியளவில் நடந்தது. தண்ணீர் இவ்வளவு ஆழமாக இருக்கும் என்று ஓட்டுநர் எதிர்பார்க்கவில்லை. பேருந்துக்குள் தண்ணீர் வரத் தொடங்கியதைக் கண்டு அவர் வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக அப்பகுதியினர் உதவியுடன் பள்ளி குழந்தைகள் மீட்கப்பட்டனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டிராக்டரைப் பயன்படுத்தி பேருந்தும் அங்கிருந்து மீட்கப்பட்டது” என்றார்.